Paristamil Navigation Paristamil advert login

உங்கள் துணையுடன் இருக்கும் போது தூக்கம் வருகிறதா?

உங்கள் துணையுடன் இருக்கும் போது  தூக்கம் வருகிறதா?

1 ஐப்பசி 2025 புதன் 16:09 | பார்வைகள் : 118


நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போது தூக்கம் வருவது என்பது சலிப்பு அல்லது ஆர்வம் இல்லாததை காட்டுவது என்பதாகாது, மாறாக அது உங்கள் உடலின் பாதுகாப்பு உணர்வைக் காட்டும் ஓர் அறிகுறி என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.உங்கள் துணையுடன் இருக்கும் போது திடீரென தூக்கம் அல்லது மயக்கம் வருகிறதா? இதை சிலர் "சலிப்பு" அல்லது "ஆர்வமின்மை" என்று எண்ணலாம். ஆனால் விஞ்ஞானிகள், இது உண்மையில் உறவின் ஆழ்ந்த நெருக்கத்தையும், மனநிம்மதியையும் பிரதிபலிக்கிறது என்கிறார்கள். இது உணர்ச்சிப் பாதுகாப்பின் அடையாளம், மேலும் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு இதுபற்றி தெரிவித்திருப்பதாவது, பாதுகாப்பாக இணைந்த ஜோடிகள் அதிக நிம்மதியான மற்றும் தரமான தூக்கத்தை அனுபவிக்கிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதாவது, நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் இருப்பது உடலுக்கு "பாதுகாப்பான சூழல்" என்று உங்கள் மூளை சிக்னல் தருகிறது.

உடல் நெருக்கம் ஏற்படும் போது, உடல் ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோனை சுரக்கிறது. இது "காதல் ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. ஆக்ஸிடோசின், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை குறைக்கிறது. இதன் விளைவாக, உடல் தளர்ச்சி அடைந்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு தயாராகிறது.
நரம்பு மண்டலத்தின் தாக்கம்

நம்பிக்கையுடனான அன்பு, பாராசிம்பத்தடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் உடல் பாதுகாப்பான சூழலில் இருக்கிறது, மன அழுத்தம் இல்லை, நிம்மதியுடன் செயல்பட முடியும் என்று மூளை இயல்பாக சிக்னல் அனுப்புகிறது. இதய துடிப்பு மெதுவாகும், இரத்த அழுத்தம் சீராகும், செரிமானம் சிறப்பாக நடைபெறும், உடல் முழுவதும் ஓய்வும் நிம்மதியும் ஏற்படும் என்பதால் உடல் இயற்கையாக தூக்க நிலைக்கு செல்கிறது.

தனியாக இருக்கும் போது பலர் எதிர்காலம் குறித்த சிந்தனைகளில் மூழ்கி, பதட்டத்தால் தூக்கத்தை இழக்கிறார்கள். ஆனால், அன்பான துணையின் அருகில் இருக்கும் போது அந்த யோசனை “என்ன ஆகும்?” என்கிற கவலையை குறைக்கிறது. இதனால், மனம் அமைதியாகி, இயற்கையான தூக்கத்தை பெற உதவுகிறது.

- மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
- நீண்ட காலத்தில் இதய ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறது

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுவதாவது, அன்பான உறவுகள் மற்றும் நல்ல தூக்கம் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இவை இணைந்து மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குகின்றன.

நீங்கள் நேசிக்கும் ஒருவரின் அருகில் இருக்கும் போது தூக்கம் வருவது சலிப்பு அல்ல. உண்மையில், இது உங்கள் உடல் “நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்” என்று சொல்லும் ஒரு அறிகுறி தான். அன்பானவரின் அருகாமையில் இருப்பது மனநிலை மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து, நல்ல தூக்கத்திற்கு உங்களை தயாராக்குகிறது.

எனவே, அடுத்த முறை உங்கள் துணையுடன் இருக்கும் போது தூக்கம் வந்தால் அதை ஆர்வமின்மை என தவறாக எண்ண வேண்டாம். அது உங்கள் உடல் மற்றும் மனதிற்கு பிடித்த, நிம்மதி கிடைத்ததற்கான ஓர் அடையாளம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்