காசாவிற்கு 40 படகுகளில் நிவாரணம் கொண்டு சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல் கடற்படை

3 ஐப்பசி 2025 வெள்ளி 06:26 | பார்வைகள் : 107
காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் பத்திரமாக அஷோத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் இல்லை என அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசாவில் மோசமான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க நடிகை சூசன் சாரண்டன், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், 40 படகுகளில் கடல்வழியாக நிவாரணப் பொருட்களை ஏற்றி காசாவை நோக்கிப் பயணித்தனர்.
அவர்கள் பயணித்த படகுகள், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர், அவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினர் அனைவரும் இஸ்ரேலில் உள்ள அஷோத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1