Paristamil Navigation Paristamil advert login

ரசிகர்களை கவர்ந்ததா ‘காந்தாரா சாப்டர் 1’?

ரசிகர்களை கவர்ந்ததா ‘காந்தாரா சாப்டர் 1’?

3 ஐப்பசி 2025 வெள்ளி 11:43 | பார்வைகள் : 131


காந்தாரா படத்தின் கதை அனைவரும் அறிந்ததே. அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை சொல்லும் கதை காந்தாரா- சாப்டர் 1. பாங்ரா என்ற தேசத்தை சேர்ந்த ராஜா, காந்தாரா என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வாழும் காட்டுப்பகுதியை அழிக்க நினைக்கிறார். ஆனால், தெய்வீக சக்தி உதவியுடன் ராஜா படைகளை ஓட விடுகிறார்கள் காந்தாரா மக்கள். அதில் தப்பித்த ராஜாவின் வாரிசுகள், பல ஆண்டுகளுக்குபின் மீண்டும் காந்தாராவை கைப்பற்ற நினைக்கிறார்கள். அங்குள்ள மக்களை தந்திரமாக அழித்து, அந்த தெய்வீக சக்தியை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். தங்களின் குல தெய்வமான குலிகா மற்றும் சிவன் சக்தி உதவியுடன் அதை எப்படி தடுக்கிறார் காந்தாரா பகுதி தலைவனான ஹீரோ ரிஷப் ஷெட்டி என்பது இந்த பாகத்தில் சொல்லப்படும் கதை.

முதற்பாகத்தை நினைத்துக்கொண்டு காந்தாரா சாப்டர்1 பார்க்க உட்கார்ந்தால் இடைவேளை வரை, என்ன கதை, என்ன நடக்கிறது என்றே புரியாத நிலை. காந்தாராவில் வசிக்கும் ஹீரோ ரிஷப்ஷெட்டி நண்பர்கள் சிலருடன், ராஜாவின் ஆளுகைக்கு உட்பட தேசத்தில் நுழைகிறார். அங்கே பல வீர விளையாட்டுகளை செய்கிறார். அதை பார்த்து மயங்கும் இளவரசி ருக்மணி வசந்த், அவர் மீது காதல் வயப்படுகிறார்.

இதற்கிடையில், காந்தாரா மக்களின் தெய்வ சக்தியை கட்டுப்படுத்த ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. பாங்ரா தேசத்தின் அரசன் பொறுப்பற்ற முறையில் ஆட்சி நடத்துகிறார். இன்னும் சில கிளைக்கதைகள் என ஏதேதோ முதற்பாதி போகிறது. என்னடா இது, காந்தாராவை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று பெருமூச்சு விட வேண்டியது இருக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் கதை வேறுதிசைக்கு மாறுகிறது. பாங்ரா மன்னனும், ருக்மணியின் சகோதருமான குல்சன்தேவய்யா பெரும்படையுடன் காந்தாரா பகுதிக்குள் சென்று அந்த மக்களை சித்ரவதை செய்கிறான், கொடூரமாக கொல்கிறான். அப்போது காந்தாரா முதல்பாகம் மாதிரி ஹீரோ உடலுக்குள் குலிகா தெய்வம் வந்து அந்த ராஜாவை துவம்சம் செய்து கொல்கிறது. படைகளை துரத்துகிறது. மகன் இறந்த சோகத்தில் இருக்கும் ராஜா அப்பா ஜெயராம் காந்தாரா மக்களுடன் சமாதானம் பேசுகிறார். அதன்படி காந்தாராவில் இருக்கும் தெய்வ சிலைகள், அரண்மனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கே உள்ள பெரிய சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஆனால், ஜெயராமோ காந்தாரா மக்களின் தெய்வசக்தியை அவர்கள் எதிர் டீம் உதவியுடன் கட்டுப்படுத்தி, காந்தாராவுக்கு அழிவை உண்டாக்க நினைக்கிறார். தங்கள் தெய்வத்தை காப்பாற்ற, அந்த சக்தியை மீட்க அரண்மனை நோக்கி படை எடுக்கிறார்கள் காந்தாரா மக்கள். அங்கே என்ன நடந்தது? யார் ஜெயித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ ரிஷப்ஷெட்டி இயக்குனராகவும், ஹீரோவாகவும் தனது கடும் உழைப்பால், தனது கற்பனையால் படத்தை துாக்கி நிறுத்தி இருக்கிறார்கள். அவரின் ஆக்சன் சீன்கள், தெய்வ சக்தி வந்தவுடன் மாறும் சீன்கள், குறிப்பாக, கிளைமாக்சில் அவர் ஆடும் ஆட்டம், மெய்சிலிர்க்க வைக்கிறது. இளவரசியாக வரும் ருக்மணிக்கு ஆரம்பத்தில் அதிக வேலையில்லை. ஆனால், கிளைமாக்சில் அவரும் வில்லியாக மாறுகிறார். அவருக்கும், ஹீரோவுக்குமான சண்டை பிரமாதம். இவர்களை தவிர, மன்னனாக வரும் குல்சன்தேவய்யா குடிகார, கோமாளி மாதிரி காண்பிக்கப்படுகிறார். அவரும் கடைசியில் கொடூர வில்லனாக மாறும் காட்சிகள், அவர் உடல் மொழி மிரட்டல்.

மன்னரின் அப்பாவாக வரும் ஜெயராமும் சில காட்சிகளில் கலக்கியிருக்கிறார். இவர்களை தவிர, காந்தாரா மக்கள், அரண்மனைவாசிகள், அவ்வப்போது வந்து மக்களுக்கு வழிகாட்டும் வயதானவர் ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். காமெடி என்ற பெயரில் வரும் கேரக்டர்கள் பொறுமை சோதிப்பதும், அரண்மனையில் ராஜா கூட 'மூடிகிட்டு இரு' என லோக்கல் ஸ்லாங் பேசுவதும் தனி காமெடி.

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஹீரோ என்றால் ரிஷப்ஷெட்டி மட்டுமல்ல, ஆக்சன் காட்சிகள், அந்த பிரமாண்ட செட், வியக்க வைக்கும் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், இசை இந்த ஆறு விஷயங்களை சொல்லலாம். ஆர்ட் டைரக்டர் தரணி தனது திறமையால் அந்த நுாற்றாண்டுக்கே அழைத்து செல்கிறார். பிரமாண்ட அரண்மனை, தர்பார், ராஜ வீதிகள், காந்தாரா மக்கள் வசிக்கும் காட்டுப்பகுதிகள், கோட்டைகள் என கண்களுக்கு விருந்து அளிக்கிறார். தேர் சீன், மன்னரின் போர், தெய்வ சக்தி வந்து மாறும் ஹீரோ அவதாராம், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளில் கைதட்ட வைக்கிறார்கள் பைட்மாஸ்டர்கள்.

ஹாலிவுட் படம் மாதிரியான பீல் கொடுத்து, அந்த உலகிற்கு அழைத்து செல்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப். படத்தின் பெரும்பகுதியில் கிராபிக்ஸ் புகுந்து விளையாடியிருக்கிறது. அதை நேர்த்தியாக கொடுத்த அந்த குழுவை பாராட்டலாம். அரண்மனை, குகை, புலி, தேவாங்கு சீன்கள், போர் சீன்கள் கண்களிலயே நிற்கிறது. முதற்பாகம் அளவுக்கு பாடல்கள் இல்லை.ஆனாலும், பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் அஜனீஷ். முதற்பாகத்தில் ஹிட்டான வாரக ரூபம்
அந்த பாடல், அந்த பஞ்சுர்லி தெய்வ சடங்குகள் கிளைமாக்சிலும் வருகிறது. அது தனி பக்தி மயம்.

முதற்பாதியை ஏனோதானோ என எடுத்த இயக்குனர், அந்த ஒன்றரை மணி நேரத்தை வீணாக்கி, பொறுமையை சோதிக்க வைக்கிறார். ஆனாலும், அடுத்த பாதியில் காந்தாரா உலகிற்குள் கொண்டு சென்று நம்மை கட்டிப்போடுகிறார். முதற்பாதியில் குலிகா என்ற தெய்வம் வந்தது போல, இந்த பாகத்தில் சாவுண்டி என்ற பெண் தெய்வம் வருகிறது. சிவனின் சக்தியை மெய்சிலிர்க்க சொல்கிறார். பல இடங்களில் தெய்வம் சம்பந்தப்பட்ட, அதன் சக்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.

ஒவ்வொரு சீனையும் எவ்வளவு ரசித்து எடுத்து இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்து இருக்கிறார்கள் என்பது அந்த விஷூவலில் தெரிகிறது. எளியவர்களை தெய்வம் கைவிடாது. நம் தெய்வ நம்பிக்கை வீண் போகாது என்ற ஆழமான கருத்தை, பிரமாண்டம், அரசன், பழங்குடி மக்கள், குல தெய்வம், காடு, கிராபிக்ஸ், ஆக் ஷன் கலந்து தரமான படைப்பாக இந்த பாகத்தை கொடுத்து இருக்கிறார் ரிஷப்ஷெட்டி

வர்த்தக‌ விளம்பரங்கள்