நீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா?
19 ஐப்பசி 2020 திங்கள் 13:49 | பார்வைகள் : 9068
குழந்தையின்மை… அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்த இந்தக் குறைபாடு இன்றைக்கு பெருகிவருகிறது. நீண்ட நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளே அதற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
கம்ப்யூட்டர்:
இன்றைக்கு ஐ.டி துறை மட்டுமல்லாமல் எல்லா நிறுவனங்களுமே கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு விட்டன. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கும் பலர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் பணியைத் தொடர்வதால் அவர்கள் உண்ட உணவு செரிமானமாவதில்லை.
கம்ப்யூட்டர் பணியாளர்களிடம் உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. மேலும் அவர்கள் போதுமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. சாதாரணமாக நடக்கக்கூட நேரமில்லாமல் வாகனங்களில் போய் வருகிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக உடலியக்கம் குறைந்துவிடுவதால் பலருக்கு கெட்ட கொழுப்பு அதிகரிப்பது, ரத்த அழுத்தக் கோளாறுகள், தொப்பை, உடல்பருமன் என பிரச்சினைகள் அணிவகுக்கின்றன.
லேப்டாப்:
சிந்தனை முழுவதும் வேலையிலேயே இருப்பதால் புத்துணர்ச்சியூட்டும் ஹார்மோன்கள் உறங்கிவிடுகின்றன. உடல்சூடு, சோம்பல், தூக்கமின்மை என வேறு சில கோளாறுகள் அவர்களை சராசரி மனிதனைப்போல இயங்க விடுவதில்லை. லேப்டாப்புகளை மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் அவர்களது உள்ளுறுப்புகளையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைவதாகவும், பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக லேப்டாப்பை மடியில் வைத்து நீண்டநேரம் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
விந்தணு வீரியம்:
அப்பார்ட்மென்ட்டுகளில் வசிக்கும் பெண்களது உடலில் சூரியஒளி படாததால் அவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படுகின்றன. இல்லத்தரசிகளில் பலர் வீடுகளைவிட்டு வெளியே வராமல் டி.வியே கதி என்று இருப்பதால் அவர்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் வரலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணியாற்றும் ஆண்கள் பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே அடைந்துகிடக்கிறார்கள். அவர்களது உடலில் வெயில்படாததால் விந்தணுக்களின் வீரியம் குறைந்து குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படுகிறது. கூடவே, நீண்டநேர செல்போன்களின் பயன்பாடும் இந்தப் பிரச்சினைகளுக்கு வலு சேர்க்கிறது.
சிகிச்சை:
பொதுவாகவே, இன்றைக்கு திருமணமான எல்லோருமே உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. சிலமாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகே தகுதியாகிறார்கள். அதிலும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுவதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அறிவியலின் வளர்ச்சியில் கிடைத்த கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை நம் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், நீண்ட நேரம் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குழந்தையின்மை பிரச்சினை மட்டுமல்ல வேறு சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.