காசா முனையில் போர் நிறுத்தம் - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுமி

10 ஐப்பசி 2025 வெள்ளி 14:58 | பார்வைகள் : 179
காசா முனையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, அங்கு வசிக்கும் பனியாஸ் என்ற சிறுமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை 10.10.2025 காசா பகுதியில் தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. இதன் மூலம், இரண்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காசா மோதல் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்ததை அறிந்த பனியாஸ், காணொளி ஒன்றில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார்.
“அனைவருக்கும் வணக்கம். இன்று காலை மிகவும் வித்தியாசமானதும் சிறப்பானதும் . போர் முடிவடைந்தது! நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் நாங்கள் காசாவுக்கு திரும்பிச் செல்லவிருக்கிறோம்.
இன்று வீட்டில் அமர்ந்து இருந்தபோது, அம்மா வந்து ‘ஒரு நல்ல செய்தி உண்டு’ என்றார். அது போர் முடிவடைந்துவிட்டது என்பதுதான்! அந்த நிமிஷத்தில் நான் குதித்து மகிழ்ந்தேன். இது எனது வாழ்வில் மறக்க முடியாத காலை. சந்தோசத்தில் அழுதேன்.”
அதேபோல், பனியாஸ் மேலும்,
“எனது முதல் நம்பிக்கை — போர் முடிவடையும் என்பதுதான்.
இரண்டாவது நம்பிக்கை — எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.
மூன்றாவது நம்பிக்கை — காசா விரைவில் மீண்டு எழ வேண்டும்.
இப்படி ஒரு போரை மீண்டும் நாம் சந்திக்க வேண்டாம்.”
இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காசா மக்களுக்கு இது ஒரு நம்பிக்கை தருணமாக மாறியுள்ளது. பனியாஸ் தனது காணொளி செய்தியின் இறுதியில், “காசா மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.