பரிஸ் அணையா விளக்கில் வழக்கறிஞர் ஒருவர் மலர்களை பறித்து அவமதிப்பு!!

10 ஐப்பசி 2025 வெள்ளி 14:57 | பார்வைகள் : 566
பரிஸ் நகரின் மையத்தில் உள்ள l’Arc de Triomphe நினைவுச்சின்னத்திலுள்ள பெயரில்லா சிப்பாயின் சமாதியில் 51 வயதுடைய ஒரு வழக்கறிஞர் கடந்த வியாழக்கிழமை பரபரப்பான சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பாதுகாப்பு தடைகளை மீறி, சமாதியில் வைக்கப்பட்டிருந்த மலர்களை கிழித்தெறிந்துள்ளார். காவல் துறையினர் தடுக்க முயன்றபோது, அவர் தப்பிச் செல்ல முயன்றதுடன், தனது காரை ஒரு காவல்துறை அதிகாரியை நோக்கி செலுத்தியுள்ளார். பின்னர் போலீஸார் அவரை கைது செய்ய முயன்றபோது, அவர் கடுமையாக எதிர்த்ததுடன், ஒரு போலீஸாரை கடித்தும், அவமதிக்கும் வார்த்தைகள் கூறியும் உள்ளார்.
இந்த வழக்கறிஞர் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், அவரை மனநலம் பரிசோதனைக்காக காவல்துறை மருத்துவ மையத்திற்கு அனுப்பியுள்ளனர். அவர் மீது “சமாதியை அவமதித்தல்”, “போதைப்பொருள் உடன் வாகனம் செலுத்துதல்”, “அதிகாரியை தாக்குதல்” உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற சம்பவங்கள் இந்த நினைவேந்தல் இடத்தில் தொடர்ச்சியாக நடைபெறுவதால், இது பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.