புதிய சகாப்தம் படைத்த குட்டி அணி! தென் ஆப்பிரிக்கா வரலாற்று தோல்வி

12 ஐப்பசி 2025 ஞாயிறு 15:14 | பார்வைகள் : 112
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நமீபியா அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 1 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஹெர்மன் 23 (18) ஓட்டங்கள் எடுத்து வெளியேற, தடுமாறிய லுஹுன்-ட்ரே பிரிட்டோரியஸ் 22 (22) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
நமீபியாவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் ஓட்டங்கள் எடுக்க வீரர்கள் போராடினர்.
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ஜேசன் ஸ்மித் 31 ஓட்டங்களும், போர்டுன் 19 ஓட்டங்களும் எடுத்தனர். நமீபியா தரப்பில் ட்ரம்பெல்மேன் 3 விக்கெட்டுகளும், மேக்ஸ் ஹெய்ங்கோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய நமீபியா அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் ஸானே கிரீன் அதிரடி காட்ட வெற்றிப்பாதையை நெருங்கியது. 20வது ஓவரின் கடைசி பந்தில் ஸானே கிரீன் (Zane Green) பவுண்டரி அடிக்க நமீபியா அபார வெற்றி பெற்றது.
களத்தில் நின்ற ஸானே கிரீன் 23 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்களும், ரூபென் ட்ரம்பெல்மேன் 8 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 11 ஓட்டங்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் நமீபியா அணி புதிய சகாப்தம் படைத்தது. அதேபோல் முழு உறுப்பினராக இல்லாத ஒரு நாட்டிடம் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது.