விஜய் அரசியலுக்கு வந்த பின் திருமாவளவன் குழம்பி இருக்கிறார் ! அண்ணாமலை

14 ஐப்பசி 2025 செவ்வாய் 14:55 | பார்வைகள் : 105
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குழம்பி போய் இருக்கிறார்,'' என, மதுரை விமான நிலையத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீதிபதி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக அதை கண்டித்து நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு வழக்கறிஞரை தாக்குகின்றனர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., ஒரு கட்சித் தலைவர். இதுகுறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனம் மருந்து தயாரித்ததில் உ.பி., யில் 23 குழந்தைகள், ராஜஸ்தானில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். தமிழக அரசு மருந்து ஆய்வாளர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தமிழக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல மாய தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
மருந்து நிறுவனம் 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களை செய்து இருக்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மருந்து ஆய்வாளர்கள் யாரும் அந்நிறுவனத்திற்கு நேரடியாக சென்று தயாரிப்பு குறித்து பரிசோதனை செய்யவில்லை.
23 குழந்தைகள் இறந்த பிறகு, சிறப்பு புலனாய்வு குழு வந்த பிறகு அந்த அதிகாரிகளை கைது செய்யக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இப்பிரச்னையில் தமிழக அரசுக்கு முழு பொறுப்பு உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்று தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மருந்தியல் ஆணையம் நடத்திய பயிற்சி வகுப்பில் மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் பங்கேற்கவில்லை. தமிழக அரசு இத்துறையை சுத்தம் செய்து இனிமேல் இது போல் நடக்காமல் பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க., கூட்டத்திற்கு த.வெ.க., கொடியுடன் நிர்வாகிகள் வந்துள்ளதில் எது உண்மை, எது பொய் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் சிலர் பாக்கெட்டில் நான்கு கட்சிகளின் கார்டு வைத்திருக்கிறார்கள்.
கூட்டணி என்றால் ஒரு மித்த கருத்து இருக்க வேண்டும். பொதுக்கொள்கை இருக்க வேண்டும். தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பது பொது லட்சியம். அதற்காக சித்தாந்தத்தை தாண்டிகூட கூட்டணி சேரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் பிரச்னை உள்ளது. அவர் குழம்பி போய் இருக்கிறார். வக்கீலை தாக்கியது குறித்து பதிவிட்டதாக என்மீது திருமாவளவன் குற்றம் சாட்டுகிறார். தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத்து இருக்கிறார். எத்தனை காலத்திற்கு வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்வார்கள்.
தமிழகத்தில் தி.மு.க., வை பொருத்தவரை ஒன்று ஜாதிக்கு எதிரி. மற்றொன்று ஜாதி வேஷம் என இரு வேறு அரசியல் செய்கின்றனர். தெரு பெயரில் ஜாதியை நீக்குவது தொடர்பான அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார்.