ஸ்டீயரிங் வீல் கழன்று விட்டதாகக் கூறிய RATP பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!!

14 ஐப்பசி 2025 செவ்வாய் 14:46 | பார்வைகள் : 809
மார்ச் 2025இல் Seine-Saint-Denisஇல் உள்ள Pavillons-sous-Bois பகுதியில் RATP பேருந்து ஓட்டுநர் ஒருவர், ஸ்டீயரிங் தானாகவே கையில் கழன்று வந்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் RATP நிறுவனம் விசாரணை நடத்தியதில், ஓட்டுநரே ஸ்டீயரிங் உருளையை கையால் தளர்த்தியதாக காட்சிப் பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டதாக கூறுகிறது. அதனால், நிறுவனம் அவரை செப்டம்பரில் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், அவர்மீது முறைகேடு நடவடிக்கைக்காக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை தொழிற்சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. ஓட்டுநர் இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நற்செயலாளரெனவும், இந்த சம்பவத்தை வெளியிட்டதற்காகவே அவரை தண்டிக்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது பயணிகள் இருந்ததாக ஓட்டுநர் கூறியதையும் வீடியோவில் உறுதி செய்ய முடியவில்லை என்று நிறுவனம் கூறுகிறது.
தற்போது ஓட்டுநர் வக்கீலுடன் ஆலோசனை மேற்கொண்டு நீதிமன்ற வழக்குக்கு தயாராகி உள்ளார். சம்பவத்துக்குப் பிறகு, அந்த வகை பேருந்துகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டுள்ளன, ஆனால் எந்தவொரு பழுதும் கண்டுபிடிக்கப்படவில்லை.