பீஹார் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜ

15 ஐப்பசி 2025 புதன் 10:35 | பார்வைகள் : 105
பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 71 பேர் கொண்ட இப்பட்டியலில் துணை முதல்வர்கள் போட்டியிடும் தொகுதிகள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் தொகுதி குறித்து அறிவிப்பு இல்லை.
பீஹார் சட்டசபைக்கு நவ., 6ல், 121 தொகுதிகளுக்கும், நவ., 11ல் 122 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில் தொகுதிகள் பங்கீடு தொடர்பான பேச்சு முடிவடைந்து, நேற்று முன்தினம் அது குறித்த அறிவிப்பு வெளியானது. அதில், பா.ஜ., மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 இடங்களும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி.,யான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது. அதில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் துணை முதல்வர் சம்ரட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்வர் விஜய் சின்ஹா லகிசாராய் தொகுதியிலும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவின் பெயர் இடம்பெறவில்லை. எஞ்சிய தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இப்பட்டியலில் 9 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 துணை முதல்வர்கள், தற்போதைய அமைச்சர்கள் 6 பேரின் பெயர்களும் உள்ளன.
ஓபிசி பிரிவைச் சேர்ந்த 11 பேருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் பாஜ வாய்ப்பு அளித்துள்ளது.
இந்த தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.