இஷாரா செவ்வந்தியின் கைது - பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கை

14 ஐப்பசி 2025 செவ்வாய் 18:31 | பார்வைகள் : 220
“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையானது பல மாத காலமாக திட்டமிடப்பட்டதாகும். இந்த கைது நடவடிக்கைக்கு நேபாள அரசாங்கமும் சர்வதேச பொலிஸாரும் ஒத்தழைப்பு வழங்கியிருந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள பாதாள உலக கும்பலை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்து வருகின்றனர். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.