அதிபயங்கர ஏவுகணையை கோரும் உக்ரைன்...

17 ஐப்பசி 2025 வெள்ளி 18:46 | பார்வைகள் : 281
அமெரிக்க ஜனாதிபதி உடனான சந்திப்பின் போது பலம் வாய்ந்த ஏவுகணைகளை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வாஷிங்டனில் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை(இன்று) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் டிரம்ப் நடத்திய தொலைபேசி உரையாடலுக்கு அடுத்த நாள் நடைபெறுவதால் டிரம்ப் - ஜெலென்ஸ்கி இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, அடுத்த வாரம் மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் அதிகாரிகள் குழுக்கள் அடுத்த வாரம் கூடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு தலைவர்களும் நேருக்கு நேர் ஹங்கேரியில் சந்தித்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் இந்த சந்திப்பின் போது நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட டோமாஹாக் (Tomahawk) குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது குறித்தும் ஜெலென்ஸ்கி நேரடி கோரிக்கையை முன் வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தயாரிப்பான டோமாஹாக் ஏவுகணை சுமார் 2,500 கி மீ தூரத்தை கடந்த இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது, எனவே உக்ரைனின் இந்த கோரிக்கையை மனதில் கொண்டு ரஷ்யா பேச்சுவார்த்தைகளுக்கு அவசரம் காட்ட தொடங்கி இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வார தொடக்கத்தில் டோமாஹாக் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “பார்க்கலாம், நாம் செய்யலாம்” என்று பதிலளித்து இருந்தார்.