சட்டசபையின் கடைசி நாளான நேற்று 16 மசோதாக்கள்! நிறைவேற்றம்

18 ஐப்பசி 2025 சனி 08:05 | பார்வைகள் : 148
சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில், கல்வி நிறுவனங்கள் அமைக்க அனுமதி தரும் மசோதா முக்கியமானது. கடந்த 14ம் தேதி துவங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அதை தொடர்ந்து, 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அறநிலையத்துறை நிலத்தில் கல்வி நிறுவனங்கள்:
தமிழ்நாடு ஹிந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டத்திருத்த மசோதாவை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார்.
அதில், பல்வேறு சமய நிறுவனங்களுக்கு, சமய நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட அசையா சொத்துக்கள் பயன்பாடின்றி உள்ளன.
அவற்றில் கல்வி நிறுவனங்களை நிறுவி பராமரிக்கவும், அர்ச்சகர்கள், இசை கலைஞர்கள், வேத பாராயணர்கள் ஆகியோருக்கான பயிற்சி பள்ளிகள் அமைக்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., - 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, ''கல்வி நிறுவனங்களை அமைப்பது அரசின் கடமை; கோவில் நிலங்களையும், நிதியையும் கோவில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
இந்த மசோதா, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.
தனியார் பல்கலைக்கு அனுமதி :
மாநகராட்சி பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 30 ஏக்கர், மற்ற பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் இருந்தால், தனியார் பல்கலை அமைக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, அ.தி.மு.க., - அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த மசோதாவும் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.
கவர்னர் திருப்பி அனுப்பிய நிதி மசோதா மீண்டும் நிறைவேற்றம்:
கடந்த 2022 பிப்ரவரி 22ல், தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில், அடுத்த நிதியாண்டுக்கு பொருந்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய, திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
அந்த மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர் ரவி, 'இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல' என கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தை வாசித்த சபாநாயகர், ''அதில் உள்ள கருத்துகளை சட்டசபை நிராகரிக்கிறது,'' என்றார். அதை தொடர்ந்து, இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ''18 மாதங்கள் நிலுவையில் வைத்திருந்த இந்த நிதி மசோதாவை, கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இது போன்ற மசோதாக்கள், 2010, 2015, 2020ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு உள்ளன,'' என்றார்.
மேலும், முன்னாள் எம்.எல்.ஏ., ஓய்வூதியம் உயர்வு, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதித்தல், கழிவு நீக்க செயல்பாடுகளுக்கான உரிமம் வழங்க ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குதல், தமிழக பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப் புதல் போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், 28 மாவட்ட ஊராட்சிகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டித்தல், அரசின் டெண்டர்களை தமிழக அரசின் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளுதல், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை சட்டம் உள்ளிட்ட 16 சட்ட மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
சித்த மருத்துவ பல்கலை சட்டத்திற்கு, அ.தி.மு.க., - தளவாய்சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று சட்டசபை கூட்டம் முடிந்ததும், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.