Paristamil Navigation Paristamil advert login

தேவை இல்லாத வழக்குகளை சி.பி.ஐ., தலையில் திணிக்காதீர்கள் சுப்ரீம் கோர்ட் அறிவுரை

தேவை இல்லாத வழக்குகளை சி.பி.ஐ., தலையில் திணிக்காதீர்கள் சுப்ரீம் கோர்ட் அறிவுரை

18 ஐப்பசி 2025 சனி 09:05 | பார்வைகள் : 157


வழக்கமான நடைமுறையாக, சி.பி.ஐ., விசாரணைக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடக் கூடாது. விதிவிலக்கான மற்றும் அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், சட்ட மேல்சபை ஊழியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

கடைசி முயற்சி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உ.பி., அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

நீதிமன்றங்கள் தங்கள் உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது, கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும்.

சிலரால் குறை கூறப்படுவதாலோ அல்லது மாநில காவல் துறையின் மீது ஒரு தரப்பினருக்கு நம்பிக்கை இல்லையென்பதாலோ, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது.

விதிவிலக்கான மற்றும் அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே, அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

குற்றங்கள் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்றும், நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்றும் நீதிமன்றங்கள் கருதினால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம்.

மேலும், வழக்குகளின் சிக்கல் தன்மை, தேசிய அளவில் அதன் தாக்கம், அதிகாரிகள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், மாநில காவல் துறையின் மீது சந்தேகம் எழும் சூழல்களில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம்.

கூடுதல் சுமை கட்டாயப்படுத்தும் சூழல் இல்லாத நிலையில், விசாரணையில் சி.பி.ஐ., தலையிடுவதை தவிர்த்து, நீதித் துறை கட்டுப்பாட்டை நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி சி.பி.ஐ., மீது கூடுதல் சுமையை வைக்க வேண்டாம்.

இந்த வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்