குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் இப்படி பேசாதீங்க..

19 ஐப்பசி 2025 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 130
குழந்தைகளிடம் எப்போதுமே கவனமாக பேச வேண்டும். நாம் எதேச்சையாக சொல்லும் சில வார்த்தைகள் கூட அவர்களது ஆளுமையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் பெற்றோர் கூறும் வார்த்தைகள் தான் குழந்தையின் மனதையும் சுய மதிப்பையும் வடிவமைக்கின்றன. நாம் சொல்லும் மேம்போக்கான வார்த்தைகள் கூட அவர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கிவிடும். தன்னம்பிக்கை மிக்க குழந்தைகளை வளர்ப்பதற்கு இதிலுள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத 5 சொற்றொடர்களைப் பற்றியே இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
உன் சகோதரி/சகோதரனைப் போல் நீ ஏன் இருப்பதில்லை?இப்படி நேரடியாக ஒப்பீடு செய்து பேசுவது குழந்தைகளிடம் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உடன்பிறப்புகளுக்கு இடையே வெறுப்பை வளர்த்து, தாங்கள் எதற்கும் சரிபட்டு வர மாட்டோம் என உணர வைக்கிறது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பாராட்டுவதோ அல்லது விமர்சனம் செய்வதோ, குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மை மற்றும் பதட்ட உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க உளவியல் சங்கம் கூறுகிறது. ஆகவே இனிமேல் ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள தனிப்பட்ட பலம் மற்றும் முயற்சிகளில் கவனம் செலுத்தி, அவர்களின் தனித்துவமான முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள்.
நீ நன்றாக தானே இருக்கிறாய்! அப்புறம் ஏன் அழுகிறாய்ஒரு குழந்தையின் உணர்ச்சிகளை நாம் புறக்கணிக்கும் போதோ அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கும் போதோ, தங்கள் உணர்வுகளை யாரும் மதிப்பதில்லை அல்லது நாம் பலவீனமாக இருக்கிறோம் என்ற நினைப்பை குழந்தைகளிடம் தோற்றுவிக்கிறது. "எல்லா உணர்வுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. ஆனால் குழந்தைகளின் எல்லா நடத்தைகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல" என்று உளவியலாளர் டாக்டர் லாரா மார்க்கம் கூறுகிறார். ஆகவே அவர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, "நீ வருத்தமாக இருப்பது எனக்கு தெரிகிறது. உன்னுடைய பிரச்சனையை எப்படி சரிசெய்வது என பார்ப்போம், வா" என்று கூறி அவர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீ மிகவும் புத்திசாலிஇப்படிச் சொல்வது நேர்மறையாகத் தோன்றினாலும், குழந்தையின் உள்ளார்ந்த "புத்திசாலித்தனம்" அல்லது "திறமையை" அவர்களின் முயற்சியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து புகழ்வது அவர்களிடம் நிலையான மனநிலையை உருவாக்கும். இது குழந்தைகளிடம், தான் மிகவும் அறிவாளி என நம்ப வைத்து தோல்வி பயத்திற்கு வழிவகுக்கிறது. இதற்கு பதிலாக, அவர்களின் முயற்ச்சியைப் பாராட்டுங்கள்.
நீ மெதுவாக செய்கிறாய் / அதைக் குழப்பிவிடுவாய்! நானே செய்கிறேன்இந்த சொற்றொடர் குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், சுதந்திரம் பெறவும் உள்ள வாய்ப்புகளை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கிறது. இது அவர்களின் திறன்களில் நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கிறது. இப்படிச் சொல்வதற்குப் பதிலாக, "இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நான் உணக்கு காண்பிக்கட்டுமா அல்லது நீயும் செய்து பார்க்க விரும்புகிறாயா?" எனக் கேளுங்கள்.
முட்டாள்தனமாக இருக்காதே/ கேள்விகள் கேட்காதேஒரு குழந்தையின் ஆர்வத்தையோ அல்லது கற்பனைத் திறனையோ கட்டுப்படுத்துவது, உலகை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவர்களின் உள்ளார்ந்த உந்துதலைத் தடுக்கிறது. இது அவர்களை கருத்துக்களை வெளிப்படுத்தவோ அல்லது சந்தேகங்களைக் கேட்கவோ தயங்க்கம் கொள்ளச்செய்யலாம். ஆகவே அவர்களிடம் "நீ கேட்கும் கேள்வி சுவாரஸ்யமாக இருக்கிறது. எது உன்னை அப்படி நினைக்க வைத்தது?" என்று கேளுங்கள்.