கனடா அமைச்சரவையிலிருந்து முக்கிய அமைச்சர் திடீர் ராஜினாமா

18 புரட்டாசி 2025 வியாழன் 11:04 | பார்வைகள் : 185
கனடா அமைச்சரவையிலிருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
திடீரென ராஜினாமா செய்துள்ள அவர், பிரதமர் மார்க் கார்னி அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பதவி வகித்துவந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்.
2020ஆம் ஆண்டு, கனடா வரலாற்றிலேயே முதன்முறையாக நிதி அமைச்சராக பதவியேற்ற முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றார் கிறிஸ்டியா.
கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை திறம்பட கையாண்டார் அவர். அத்துடன், நாட்டின் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தவர் கிறிஸ்டியா.
கிறிஸ்டியா, உக்ரைன் பின்னணி கொண்டவர் என கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு, ரஷ்யாவுக்குள் நுழைய கிரெம்ளின் தடை விதித்த மேற்கத்திய நாட்டவர்கள் பட்டியலில் உக்ரைன் ஆதரவாளரான கிறிஸ்டியாவும் ஒருவர்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், 9 ஆண்டுகளாக கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக முக்கிய காரணமாக இருந்தவர் இந்த கிறிஸ்டியாதான்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செலவுபிடிக்கும் அரசியல் தந்திரங்கள் செய்பவர் என்றும், அவரது பாதை வேறு, தனது பாதை வேறு என்றும் கூறி திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கிறிஸ்டியா.
அவரது செயல், ட்ரூடோ தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கக் காரணமாக அமைந்ததை மறுக்கமுடியாது. ஒன்பது ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்ய, பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்கினார் கிறிஸ்டியா.
ஆனால், மார்க் கார்னியிடம் அவர் தோற்றுப்போனார்.
இந்நிலையில், திடீரென மீண்டும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கிறிஸ்டியா. அத்துடன், இனி மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் மார்க் கார்னி, கிறிஸ்டியாவை உக்ரைனுக்கான சிறப்பு தூதராக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கோரியுள்ளார்.