Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுகளை மாற்ற முடியவே முடியாது ! :ராகுலுக்கு தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

ஓட்டுகளை மாற்ற முடியவே முடியாது ! :ராகுலுக்கு தேர்தல் கமிஷன் திட்டவட்டம்

19 புரட்டாசி 2025 வெள்ளி 08:05 | பார்வைகள் : 136


வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை தனி நபர்கள் நீக்குவதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் போட்ட ஓட்டுகளை யாராலும் மாற்றி அமைக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் கமிஷன், ராகுல் எழுப்பிய புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று விமர்சித்துள்ளது. ஆளும் பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான ராகுல் கடந்த மாதம் குற்றஞ்சாட்டினார்.

பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், பல வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய ராகுல், இதை கண்டித்து அம்மாநிலத்தில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை தனி நபர்கள் நீக்குவதாக அவர் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்த அவர் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தலின்போது, ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து, 6,018 பெயர்களை அழிக்க யாரோ சிலர் முயன்றுள்ளனர்.

பூத் அளவிலான அதிகாரி ஒருவர், தன் உறவினரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பரிசோதித்து இருக்கிறார்.

அப்போது தான், பக்கத்து வீட்டில் இருப்பவர் மொபைல் போனில் இருந்து இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டதை அவர் கண்டுபிடித்தார். உடனடியாக இது பற்றி பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது, அவர் ஏதும் அறியாமல் முழித்திருக்கிறார்.

இந்த சம்பவம் எப்படி நடந்தது என யாருக்குமே தெரியவில்லை. பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு தெரியாமலேயே அவருடைய மொபைல்போன் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. ஏதோ ஒரு சக்தி தான், தேர்தல் நடைமுறைகளை ஆன்லைன் மூலம் 'ஹேக்' செய்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருக்கிறது. இதற்காக ஒரு சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் காங்கிரஸ் வலுவாக இருக்கும் தொகுதிகளில், வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் ஜனநாயகத்தை அழிக்கும் ஓட்டு திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கிரசின் ராகுல் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உண்மைக்கு புறம்பானவை. எந்தவொரு தனி நபராலும், ஆன்லைன் வழியாக, எந்தவொரு ஓட்டையும் அழிக்க முடியாது. அதே போல், வாக்காளருக்கு தெரியாமலேயே, அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்க முடியாது. நீக்குவதற்கு முன்பாக, வாக்காளருக்கு போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படும். ஆன்லைன் வழியாக எந்தவொரு ஓட்டையும் அழிக்க முடியாது. தேர்தல் நடைமுறைகள் குறித்து ராகுல் தவறாக புரிந்து கொண்டுள்ளார்.

ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சிகள் நடந்ததாக முதலில் கண்டுபிடித்து கூறியதே தேர்தல் கமிஷன் தான். அதன் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2018ல் நடந்த தேர்தலில் ஆலந்த் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் சுபத் குட்டேதர் வெற்றி பெற்றார். ஆனால், ராகுல் கூறியது போல 2023ல், பா.ஜ.,வுக்கு சாதகமாக அங்கு தேர்தல் முடிவு வரவில்லை. அந்த தேர்தலில், காங்., வேட்பாளர் பி.ஆர்.பாட்டீல் தான் வெற்றி பெற்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் மீது பா.ஜ., குற்றச்சாட்டு பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்கூர் நேற்று கூறியதாவது: ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், ஓட்டு திருட்டு என்ற குற்றச்சாட்டை ராகுல் அள்ளி வீசி வருகிறார். தேர்தல் கமிஷன் மீதே குற்றம் சுமத்துவதால், நேபாளம், வங்கதேசத்தில் நடந்தது போல, நம் நாட்டிலும் அமைதியற்ற சூழல் நிலவ வேண்டும் என எதிர்பார்க்கிறார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கட்சி சார்புடையவர் என்றும் விமர்சிக்கிறார். தேர்தல் கமிஷனின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.கில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். மற்றொரு முன்னாள் தலைவர் டி.என்.சேஷன், லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளராகவே களம் கண்டார். இதையெல்லாம் ராகுல் நினைவில் வைத்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்