Paristamil Navigation Paristamil advert login

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் கட்சிகளிடம் செக்யூரிட்டி டிபாசிட் வசூலிக்க ஐகோர்ட் அறிவுரை

பொதுக்கூட்டங்கள் நடத்த விரும்பும் கட்சிகளிடம் செக்யூரிட்டி டிபாசிட் வசூலிக்க ஐகோர்ட் அறிவுரை

19 புரட்டாசி 2025 வெள்ளி 10:05 | பார்வைகள் : 133


பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்த விரும்பும் அரசியல் கட்சிகளிடம் இருந்து, பாதுகாப்பு வைப்புத்தொகை வசூலிக்கவும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்கவும், காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை, எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து அனுமதி வழங்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக்கோரி, அக்கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

23 நிபந்தனைகள் இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, த.வெ.க., தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி வாதாடியதாவது:

திருச்சியில் நடந்த பிரசாரத்துக்கு, மாநகர காவல் துறை 23 நிபந்தனைகளை விதித்தது. கர்ப்பிணியர், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளக்கூடாது. எவ்வழியே சென்னை திரும்ப வேண்டும்; எத்தனை வாகனங்கள் வர வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதித்தது.

இதுபோல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளும், மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளும் த.வெ.க.,வுக்கு மட்டுமே விதிக்கப் படுகின்றன.

நிகழ்ச்சிக்கு வருபவர்களை வர வேண்டாம் என எப்படி சொல்ல முடியும்? நிகழ்வுகளை நடத்த காவல் துறையிடம் இருந்து அனுமதி பெறுவதில், தேவையற்ற சிரமங்களை எதிர்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது:

அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள் தானே இவை; முழுமையாக போக்குவரத்து முடங்கினால், பொது மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?

கட்டுப்படுத்த வேண்டும் யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. பொதுக் கூட்டம் நடத்தினாலும், சட்டத்துக்கு உட்பட்டே நடத்த வேண்டும். தலைவராக இருப்பவர்கள் தான் கூட்டத்தை கட்டுப் படுத்த வேண்டும்.

சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையெனில், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும். கர்ப்பிணியர், மாற்றுத் திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை விடுத்து, மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

காவல் துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படவில்லை; நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது,'' என கூறி, கடந்த 13ம் தேதி திருச்சியில் நடந்த பிரசாரத்தில், த.வெ.க., தொண்டர்களின் செயல்கள் தொடர்பான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.

அதை பார்வையிட்ட நீதிபதி, 'இதுபோல உயரமான இடங்களில் ஏறி நின்று, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா' என கேள்வி எழுப்பினார்.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பெரியளவில் ஏற்கனவே நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டங்களில், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்களும், அதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிகழ்வுகளும் உண்டு.

இவற்றை கருத்தில் வைத்து, இந்த விவகாரத்தில் அரசு முறையான வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. பெரிய அளவிலான பொதுக் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம், அப்பாவிகளின் சொத்துக்கள் எளிதான இலக்காகும்.

இதை தடுக்க சட்டம் உள்ளது. இருப்பினும், இத்தனை ஆண்டுகளாக அது முறையாக செயல் படுத்தப்படவில்லை.

விதிமுறைகள் தேவை எனவே, பெரியளவில் நடத்தப்படும் கூட்டங்களின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பையும் ஈடுசெய்ய, அரசியல் கட்சிகளிடம் இருந்து பாதுகாப்பு தொகை வசூலிக்கும் வகையில், விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

மேலும், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய வகையிலான விதி முறைகளை காவல் துறை வகுக்க வேண்டும். இது தொடர்பாக காவல் துறை பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்