ஹமாஸை தனிமைப்படுத்த பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அவசியம் : மக்ரோன் அறிவிப்பு!!

19 புரட்டாசி 2025 வெள்ளி 08:55 | பார்வைகள் : 546
பாலஸ்தீனை தனி அரசாக அங்கீகரிக்கும் தனது முடிவை வியாழக்கிழமை இஸ்ரேல் தொலைக்காட்சியின் வாயிலாக அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தினார். “பாலஸ்தீனர்களின் சட்டப்பூர்வமான உரிமையை ஏற்றுக்கொள்வதற்கும் ஹமாஸுக்கும் தொடர்பில்லை. மாறாக, இந்த அங்கீகாரம் ஹமாஸை தனிமைப்படுத்தும் சிறந்த வழி,” என அவர் தெரிவித்தார். மேலும், தனது திட்டத்தை அடுத்த வாரம் ஐ.நா. பொதுச்சபையில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கவுள்ளதாகவும், மேற்குக் கரை நிலப்பரப்பை இணைத்துக் கொள்வது போன்ற அபாயங்கள் காரணமாக உடனடி நடவடிக்கை அவசியமாகியிருப்பதாகவும் கூறினார்.
இஸ்ரேல் அரசு கடுமையாக எதிர்க்கும் நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பணியாற்றத் தயாராக உள்ளதாக மக்ரோன் தெரிவித்தார். அதேசமயம், காசாவில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் இஸ்ரேலின் சர்வதேச நம்பகத்தன்மையை சிதைக்கிறது என அவர் கண்டனம் தெரிவித்தார். இவ்வாறான தாக்குதல்கள் “பாதுகாப்பு நலன்கள்” என்ற பெயரில் நடத்தப்பட்டாலும், உண்மையில் எதிர்மறையான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் கூறினார். தேவையெனில், இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக மக்ரோன் எச்சரித்துள்ளார்.