நோயாளிக்கு தவறுதலாக அகற்றப்பட்ட சிறுநீரகம்!
.jpg)
19 புரட்டாசி 2025 வெள்ளி 17:24 | பார்வைகள் : 371
நோயாளி ஒருவருக்கு அவரது சிறுநீரகம் தவறுதலாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Créteil நகரில் உள்ள l'hôpital Henri Mondor மருத்துவமனையில் இச்சம்பவம் கடந்த ஜூலை 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. என்றபோதும் இது தொடர்பான செய்திகள் தற்போதே வெளியாகியுள்ளன. புற்றுநோய் காரணமாக சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதன்போது அவருடைய சிறுநீரகம் (கிட்னி) அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் அவருடைய இரண்டு சிறுநீரங்களில் ஒன்று பழுதடைந்தும், மற்றையது ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. பழுதடைந்த சிறுநீரகத்துக்கு பதிலாக ஆரோக்கியமான சிறுநீரகத்தை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சில மாதங்களின் பின்னர், அவர் உடல்நலக்குறைவால் பரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் பழுதடைந்த சிறுநீரகம் இருப்பதும், ஆரோக்கியமான சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளமையும் தெரிவியவந்துள்ளது.
நோயாளிக்கு உயிராபத்து இல்லை என்றபோதும், அவர் மீதமுள்ள வாழ்க்கையை இந்த பழுதடைந்த சிறுநீரகத்துடனே வாழவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தவறு எங்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. மருத்துவமனை வட்டாரங்களின் படி, மருத்துவ ஸ்கேனர் கருவியில் பதிவேற்றப்பட்ட தரவுகளின் பிழையின் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குறித்த மருத்துவமனை மீதான சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.