வெற்றி பெற்றாலும் சோகம்- போட்டியின் போதே உயிரிழந்த இலங்கை வீரரின் தந்தை

19 புரட்டாசி 2025 வெள்ளி 18:35 | பார்வைகள் : 117
இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ஆசிய கோப்பையின் 18-09-2025 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து, 169 ஓட்டங்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில், அதிகபட்சமாக முகமது நபி, 22 பந்துகளில், 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 60 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதில், இலங்கை வீரர் துனித் வெல்லாலகே வீசிய ஒரே ஓவரில், 5 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார்.
அதைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 171 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக, குஷால் மெண்டிஸ் 74 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம், இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியை வென்றாலும் இலங்கை வீரர்களின் மகிழ்ச்சி வெகு நேரத்திற்கு நீடிக்கவில்லை.
போட்டி நடைபெறும் போதே, இலங்கை வீரர் துனித் வெல்லாலகே தந்தை சுராங்கா வெல்லாலகே 54 வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் இலங்கை அணி நிர்வாகத்திற்கு தெரிந்த பின்னர், இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியா இந்த தகவலை துனித் வெல்லாலகேவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த துனித் வெல்லாலகே, கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.
இந்த துயர சம்பவம் காரணமாக போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல், அமைதியாக ஓய்வறைக்கு திரும்பினர்.
துனித் வெல்லாலகே, இன்று காலை 08.25 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-392 மூலம் அபுதாபியிலிருந்து இலங்கை சென்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு, "துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்கா சிறிது நேரத்திற்கு முன்பு காலமானார். அதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இந்தச் செய்தி துனித்துக்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவரின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நான் எனது பள்ளியான செயிண்ட் பீட்டர்ஸ் அணிக்கு அணித்தலைவராக இருந்தபோது அவர் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் அணித்தலைவராக இருந்தார்" என தெரிவித்துள்ளார்.