474 லெட்டர்பேடு கட்சிகள் நீக்கம் ...

20 புரட்டாசி 2025 சனி 06:01 | பார்வைகள் : 145
நாட்டில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத மற்றும் கட்சி அலுவலகம் இல்லாமல், 'லெட்டர்பேடு' மட்டும் அடிப்படையாக வைத்து இயங்கிய, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத, 474 அரசியல் கட்சிகளை நீக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் செயல்பட்ட 42 'டுபாக்கூர்' கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1951 பிரிவு '29 ஏ'யின் படி, புதிதாக துவங் கும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படும் கட்சிகள், ஆறு ஆண்டுகளில், நாட்டில் நடக்கும் ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிட வேண்டும். இல்லையெனில், அவற்றின் பதிவுகள் நீக்கப்படும்.
நீக்கும் பணி
அப்படி போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து நீக்கும் பணியை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
முதற்கட்டமாக, ஆக., 9ல், ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத, 334 அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் நீக்கியது.
அந்த வகையில், தற்போது இரண்டாம் கட்டமாக, பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 474 அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது. இதில் பெரும்பாலான கட்சிகள், அலுவலகம் இல்லாமல், 'லெட்டர்பேடு' மட்டும் அடிப்படையாக வைத்து இயங்கியவை.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 121; மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவில் தலா 44; தமிழகத்தில் 42 மற்றும் டில்லியில் 40 அரசியல் கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அறிவிப்பு
கடந்த இரு மாதங்களில் மட்டும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 808 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மூன்றாம் கட்டமாக, 359 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதில், உ.பி.,யைச் சேர்ந்த 127 கட்சிகள் அடங்கும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே நிலவரப்படி, நாட்டில் 2,800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இதில், 750 கட்சிகள் மட்டுமே, 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டன. மீதமுள்ள கட்சிகள், லெட்டர்பேடு அடிப்படையில் மட்டுமே இயங்குகின்றன. இவற்றை கண்டறிந்து களையெடுக்கும் பணியை தேர்தல் கமிஷன் தீவிரப் படுத்தி உள்ளது.