ஆப்கானிஸ்தானில் 7 மாதங்கள் சிறையில் இருந்த பிரிட்டன் தம்பதி விடுதலை

20 புரட்டாசி 2025 சனி 08:53 | பார்வைகள் : 242
ஆப்கானிஸ்தானில் பிரித்தானியாவை சேர்ந்த 80 வயதான பீட்டர் ரெனால்ட்ஸ் மற்றும் 76 வயதான பார்பி ரெனால்ட்ஸ் ஆகிய இருவரும் 18 ஆண்டுகளாக கல்விப் பணிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சிக்கு வந்த பிறகும் அங்கேயே இருக்க முடிவு செய்த பிரித்தானிய தம்பதிகளை , தலீபான் திடீரென கைது செய்தமை உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை தலீபான் அரசு இன்றுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
அவர்கள் “ஆப்கானிய சட்டத்தை மீறியதாக” மட்டுமே தலீபான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் காஹர் பால்கி தெரிவித்துள்ளார்.
இந்த தம்பதியினரின் விடுதலைக்கு கத்தார் அரசு முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கா மற்றும் தலீபான் இடையே பேச்சுவார்த்தை நடத்திய கத்தார், இந்த விவகாரத்திலும் வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்தது.
தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் எங்கள் பெற்றோரை தலீபான் புரிந்துகொள்ள முடியாத வகையில் சிறை வைத்திருந்தனர் என்று தம்பதியினரின் மகள் சாரா என்ட்விஸ்டில் கண்ணீருடன் கூறினார்.
அதோடு இந்த அனுபவம், இராஜதந்திரம், மனிதநேயம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் வலிமையை எங்களுக்கு உணர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை பிரித்தானிய தம்பதியின் விடுதலை, தலீபான் அரசுக்கு ஒரு சாதகமான இராஜதந்திர நடவடிக்கை என்று கருதப்பட்டாலும், ஐ.நா. நிபுணர்கள் இந்த தம்பதியினரின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளனர்.
அதேசமயம் பிரித்தானிய தம்பதியின் மர்மமான சிறைவாசம், தலீபான் அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.