ஜன நாயகன் எப்படி இருக்கும்? எச்.வினோத் அப்டேட்

20 புரட்டாசி 2025 சனி 16:00 | பார்வைகள் : 191
தீவிர அரசியலில் இறங்கும் முன் விஜய் நடிக்கும் கடைசிப் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்திற்காக தென்னிந்திய சினிமா உலகம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தைப் பற்றி இயக்குனர் எச். வினோத் முதன்முறையாக பேசி இருக்கிறார். 'ஜனநாயகன்' விஜய்யின் சரியான ஃபேர்வெல் படமாக இருக்கும் என்றும், ஒரு மாஸ் ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்கலாம் என்றும், இப்படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்றும் எச். வினோத் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பொங்கல் விருந்தாக 'ஜனநாயகன்' வெளியாகிறது. இது ஒரு அரசியல் கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியீட்டு அறிவிப்பு போஸ்டரும் சமூக ஊடகங்களில் செம வைரல் ஆனது. அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாக விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதால், இப்படத்தின் மீது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், மமிதா, பிரியாமணி உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளம் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தரம் வாய்ந்த பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த வெங்கட் கே. நாராயணனின், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ளது. தளபதி விஜய்யின் பேவரைட் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் ஆகியோர் 'ஜனநாயகன்' படத்தின் ஒரு பாடல் காட்சியில் கேமியோ ரோலில் வர உள்ளார்கள்.
தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை பொறுத்தவரை ஒளிப்பதிவு பணிகளை சத்யன் சூரியன் மேற்கொண்டுள்ளார், சண்டைப்பயிற்சியாளராக அனில் அரசு பணியாற்றி இருக்கிறார். கலை இயக்குனராக வி. செல்வகுமார், நடனம் சேகர் மற்றும் சுதன், பாடல் வரிகள் அறிவு. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி விருந்தாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர்.