புதிய ஜி.எஸ்.டி. விதிமுறைகள் நாளை முதல்! அமல்...

21 புரட்டாசி 2025 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 126
நாடு முழுதும் நாளை முதல், புதிய ஜி.எஸ்.டி. விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் மக்கள் கைகளில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப் புழக்கம் ஏற்பட்டு, உள்நாட்டின் நுகர்வு அதிகரிக்கும். விலைவாசியும் கணிசமாக குறையும்,'' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது.
புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுஉள்ளது. கோவில்பட்டியில் நேற்று நடந்த தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விழா மலரை வெளியிட்டார். அவர் பேசியதாவது:
வரும், 2047க்குள் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடைந்த மாவட்டங்களாக மாறும். ஜி.எஸ்.டி. குறைப்பு என்பது வெறும் மாற்றம் அல்ல; புரட்சி. பிரதமர் மோடி வழங்கிய தீபாவளி பரிசை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் 375 பொருட்கள் விலை குறையும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், நடுத்தர குடும்பத்தினர், ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பயன் பெறவுள்ளனர். அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் குறையும். எனினும், உள்ளூர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக பொருளாதாரத்திற்கு கைகொடுக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்.
உதாரணத்திற்கு, அதிக அளவில் சோப் நுகர்வு இருந்தால், உற்பத்தியாளர் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி இருக்கும். இதற்காக அவர் வேலைக்கு கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும். நியமித்தால், அவர்களுக்கான வருவாய்க்காக வரி செலுத்த வேண்டும். அதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைக்கும். இந்த நுகர்வு கலாசாரம் சங்கிலி போல தொடர்ந்து நடப்பது, பொருளாதாரத்திற்கு நல்லது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
எந்த பொருட்கள் விலை குறையும்?
உணவு மற்றும் மளிகையில் 99 சதவீத பொருட்கள், 12ல் இருந்து 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. சோப், ஷாம்பு, பேபி டயப்பர், டூத் பேஸ்ட், ஷேவிங் லோஷன், ரேசர் விலை கணிசமாக குறையும். டயர் விலை 300 முதல் 2,000 ரூபாய் வரை குறைகிறது. டிராக்டர் 23,000 முதல் 63,000 வரை விலை குறையும்.