குஷி படத்தின் பார்ட் 2 உருவாகுமா?

21 புரட்டாசி 2025 ஞாயிறு 11:54 | பார்வைகள் : 180
விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இப்படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, குஷி பார்ட் 2 வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார். விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “குஷி கதையை நான் விஜய்யிடம் சொன்னபோது பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தார். இதனால் அவருக்கு கதை பிடிக்கவில்லை என நினைத்து, வேறு கதை சொல்லட்டுமா எனக் கேட்டேன். ஆனால் வேண்டாம் என்ற விஜய் இதுவே நல்லா இருக்கு, இதையே பண்ணலாம் எனக் கூறினார். நல்லா இருக்கு என்பதைகூட இவ்வளவு சிம்பிளாக சொல்கிறாரே என நினைத்தேன்.
குஷி படக் கருவும், கதை சொன்ன விதமும் வித்தியாசமானது. படத்தின் வெற்றிக்கு தேவா இசை காரணம். கட்டிப்பிடி கட்டிப்பிடி பாடலின் டியூனை செந்தமிழ் தேன்மொழியாய் என்ற பாடலில் இருந்து எடுத்தோம். அந்தப் பாடலை வேகமாகப் பாடினால் இந்தப் பாடல் டியூன் வரும்." என்று தெரிவித்தார்.
அப்போது, குஷி படத்தின் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இப்போது, விஜய் நடிப்பில் இருந்து விலகுகிறார். ஆனால், அவரின் மகன் சஞ்சய் அழகாக இருக்கிறார். அதே நேரம் ஜோதிகாவின் மகளும் வளர்ந்துவிட்டார். அவர்கள் இருவரையும் வைத்து குஷி படத்தின் பார்ட் 2 உருவாகுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா, சில அதிசயங்களை உருவாக்க முடியாது. அதுவாகவே நடக்க வேண்டும். இறைவன் அமைத்து கொடுத்தால் எல்லாம் நடக்கும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, ரீ ரிலீஸ் செய்யப்பட்டதில் இந்தியாவிலேயே கில்லி படம் தான் மிகப்பெரிய ஹிட் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறினார். குஷி மறுவெளியீட்டை ரசிகர்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடுவார்கள் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.