Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

அமெரிக்க இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

22 புரட்டாசி 2025 திங்கள் 05:48 | பார்வைகள் : 102


எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது பெரும் பிரச்னையாகியுள்ள நிலையில், ‛‛தாயகம் திரும்புங்கள். பயத்தில் வாழாமல் துணிந்து முடிவு எடுங்கள், இன்றைய இந்தியா திறமைசாலிகளுக்கு ஏராளமான வாய்ப்பு வழங்குகிறது'' என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு தொழில் துறை வல்லுநரை, அமெரிக்க நிறுவனம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றால், அவருக்காக அந்த நிறுவனம் ஒரு லட்சம் டாலர் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது இந்த விதிமுறை. இது, அமெரிக்காவில் பணியாற்றிவரும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பால் மற்ற நாடுகளில் உள்ள ஊழியர்களை மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் செப்டம்பர் 21க்குள் (இன்று) அமெரிக்காவுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன. இதுப்பற்றி ‛ஸோகோ' நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

அவர் தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் சிந்தி நண்பர்கள், தங்கள் குடும்பங்கள் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து இந்தியாவுக்கு வந்து மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்பினர் என்று சொல்வார்கள். இன்றும் அதே நிலை எச்1பி விசாவில் இருக்கும் இந்தியர்களுக்கு நேர்ந்துள்ளது. இந்தியர்களே நீங்கள் தாயகம் திரும்புங்கள். உங்களின் வாழ்க்கையை மீண்டும் அமைக்க 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அது உங்களை வலிமையாக்கும். பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலாக முடிவு எடுங்கள். உங்களுக்கு நன்மை கிட்டும். இன்றைய இந்தியா திறமைசாலிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றிய ஸ்ரீதர் வேம்பு, இந்தியா திரும்பி ஸோகோ நிறுவனத்தை நிறுவி, தற்போது உலகளாவிய சாப்ட்வேர் சேவை நிறுவனமாக வளர்த்துள்ளார்.

இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும்

இந்த விசா கட்டண உயர்வு காரணமாக திறமையான நிபுணர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் வாய்ப்பு அதிகரிக்கும். இது நம் நாட்டு தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் சூழலுக்கு வலிமை சேர்க்கும். டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மூலதன சந்தைகள் விரிவடைகின்றன. உலகளாவிய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை இந்தியாவில் நிறுவி வருகின்றன. எனவே, ஒருகாலத்தில் வெற்றிக்கான ஒரே பாதையாக அமெரிக்காவையே கருதிய பட்டதாரிகளுக்கு, இந்தியா 2025ல் வளமான தருணங்களை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்