அயர்லாந்து இசைக்குழுவிற்கு தடை விதித்த கனடா

21 புரட்டாசி 2025 ஞாயிறு 18:49 | பார்வைகள் : 201
ஐரிஷ் மொழி சொல்லிசை இசைக்குழுவான நீகேப்பை கனடா அரசாங்கம் நாட்டிலிருந்து தடை செய்துள்ளது.
நீகேப் சொல்லிசைக் குழுவானது அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கனடா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற போராளிக் குழுக்களை மகிமைப்படுத்தும் அரசியல் அறிக்கைகளுக்காக இந்தக் குழு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
மட்டுமின்றி, ஹங்கேரி அரசாங்கம் முன்பு இந்தக் குழுவைத் தடை செய்தது. லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான வின்ஸ் காஸ்பரோ தெரிவிக்கையில், Kneecap குழு வெளிப்படையாகவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளை ஆதரித்து வருகிறது, அது அவர்களின் கலை வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றார்.
வெறுப்புப் பேச்சு, வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதை கனடா உறுதியாக எதிர்க்கிறது என்று காஸ்பரோ கூறியுள்ளார். அரசியல் விவாதமும் பேச்சுரிமையும் நமது ஜனநாயகத்திற்கு இன்றியமையாதவை, ஆனால் பயங்கரவாத குழுக்களுக்கு வெளிப்படையாக ஒப்புதல் அளிப்பது பேச்சுரிமை அல்ல என்றார்.
ஆனால், காஸா - இஸ்ரேல் போரில் பாலஸ்தீன மக்களை ஆதரிப்பதால், இசைக்குழுவை மௌனமாக்க விமர்சகர்கள் முயற்சிப்பதாக நீகேப் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அவர்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை ஆதரிக்கவில்லை என்றும் வன்முறையை மன்னிப்பதில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர். காஸ்பரோவின் கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆழ்ந்த தீங்கிழைக்கும் தன்மை கொண்டவை என்றும் Kneecap குழு பதிலளித்துள்ளது.
நீகேப் அடுத்த மாதம் ரொறன்ரோ மற்றும் வான்கூவரில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.