Paristamil Navigation Paristamil advert login

விஜய் மீது தமிழக அரசும், தி.மு.க.,வும் பாய்ச்சல்

விஜய் மீது தமிழக அரசும், தி.மு.க.,வும் பாய்ச்சல்

22 புரட்டாசி 2025 திங்கள் 12:48 | பார்வைகள் : 133


மக்களை சந்தித்து வரும் த.வெ.க., தலைவர் விஜய், தன் பிரசாரத்தின் போது பொய் சொல்கிறார்' என தமிழக அரசும், தி.மு.க.,வும், அவர் மீது பாய்ந்துள்ளன. அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, உடனுக்குடன் அறிக்கைகள் வாயிலாக பதிலடி கொடுத்து வருகின்றன. கூட்டணி கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு விஜயை விமர்சித்து வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்காக, 'மக்கள் சந்திப்பு பயணத்தை' துவக்கி உள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும், இரண்டு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.கடந்த 13ம் தேதி திருச்சி, அரியலுார் மாவட்டங்களிலும், 20ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.

அலையாத்தி காடுகள்

பிரசாரத்தின் போது, அந்தந்த மாவட்ட பிரச்னைகள் பற்றி விஜய் பேசுவது, ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால், உடனுக்குடன் ஆளும் கட்சி தரப்பில் பதிலடி

கொடுக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த விஜய், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதற்கு, தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் சார்பில், உடனடியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாகையில் விஜய் பேசும் போது, மண் அரிப்பை தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்தி காடுகளை காக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.

அதற்கு, 'தமிழகத்தில் சதுப்பு நில காடுகள், அலையாத்தி காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் முயற்சியால், 2021ல் 45 சதுர கிலோ மீட்டராக இருந்தவை, இன்று90 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளன.

'நாகப்பட்டினம் மாவட்டத்தில், 1,433 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில், 1,287 ஏக்கர் நிலப்பரப்பிலும் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ளன' என, அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மீன்வள பல்கலை

அதேபோல, கடல்சார் கல்லுாரி எதுவும் நாகப்பட்டினத்தில் இல்லை' என்று விஜய் கூறியிருந்தார். அதற்கு, 'நாகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை இயங்கி வருகிறது' என, பதில் தரப்பட்டுள்ளது.

அடுத்து, மக்களை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்; அனுமதி இல்லை என்கின்றனர். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழகம் வரும் போது நிபந்தனைகள் விதிப்பீர்களா' என, விஜய் கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு, 'சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல், 9ம் தேதி பிரதமரின் பேரணிக்கு, காவல்துறை, 20 நிபந்தனைகளை விதித்தது. எனவே, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சித் தலைவரான பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை விட, விஜய் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, ஆளும் கட்சி தரப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, உடனுக்குடன் கட்சி சார்பிலும், அரசு சார்பிலும் பதில் அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் விளக்கத்தை, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளும், சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அத்துடன், விஜய் பொய் சொல்கிறார் என்றும் குற்றம் சாட்டிஉள்ளனர்.அதுமட்டுமின்றி, 'நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யவில்லை' என விஜய் தெரிவித்த புகாருக்கு பதிலடியாக, 'தி.மு.க., அரசின் முத்தான திட்டங்கள்' என, தமிழக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டு, அம்மாவட்ட தி.மு.க.,வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

ஒரு நாள் வேலை

தி.மு.க., - ஐ.டி., அணி சார்பிலும், 'பெண்களும், விவசாயிகளும், மீனவர்களும் ஏழு நாட்கள் வேலை செய்கின்றனர். விஜய் ஒருத்தரு மட்டும் தான், ஒரு நாள் மட்டும் வேலை செய்கிறார். அதுவும் சனிக்கிழமை மட்டும் சிறப்பு' என, கிண்டலடித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தி.மு.க., மட்டுமின்றி, அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., மக்கள் நீதி மய்யம் போன்றவையும் வரிந்து கட்டிக் கொண்டு விஜயை விமர்சித்து வருகின்றன.

யாருக்கும் விதிக்காத கடும் நிபந்தனைகள் ஆட்சியாளர்கள் மீது விஜய் கொந்தளிப்பு 
த.வெ.க., தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை:

த.வெ.க., குறித்து ஆள்வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்கு பெருகி வரும் அங்கீகாரத்தை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
இந்த நடுக்கத்தினாலேயே, த.வெ.க., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் போது, யாருக்கும் விதிக்காத கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றனர்.
த.வெ.க., கொள்கை தலைவர்களின் வழியில், முதன்மை சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைக்கும் பணிகளை இன்னும் தீவிரப்படுத்தும். 

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய அன்பும், பாசமும் நிகரில்லாதவை.
இவை எக்காலத்திற்கும், என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும். இந்த மக்களுக்கு வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டு உள்ளேன். தமிழக மக்களுக்கான முதன்மை சக்தியான, த.வெ.க., எதிலும் சமரசம் செய்து கொள்ளாது. புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.
இவ்வாறு அறிக்கையில்  கூறியுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்