ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை!

22 புரட்டாசி 2025 திங்கள் 12:57 | பார்வைகள் : 172
ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சூறாவளி குறித்து சமிக்ஞை வெளியிடுவது தொடர்பில் அங்குள்ள வளிமண்டலவியல் திணைக்களம் பரிசீலித்து வருகிறது.
குறித்த காலப்பகுதியை தொடர்ந்து வானிலை மோசமடையும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது.
அதேநேரம், குவாங்டாங் மாகாணத்தில் புதன்கிழமை அதிவேக மற்றும் வழக்கமான ரயில்கள் மூடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லுசோன் ஜலசந்தி வழியாக தென் சீனக் கடலின் வடக்குப் பகுதியை நோக்கி புயல் காற்று வீசுவதாக முன்னறிவிப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
சூறாவளி குவாங்டாங்கின் கரையை நெருங்கும்போது உள்ளூர் காற்று படிப்படியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னேற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஹொங்கொங் ஆய்வு நிலையம் இன்று இரவு 9.40 மணிக்கு வலுவான காற்று சமிக்ஞை இலக்கம் மூன்றை வெளியிடவுள்ளது.
அதேநேரம், வளிமண்டலவியல் திணைக்களம் புதன்கிழமை பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை எட்டாம் இலக்க சூறாவளி அல்லது புயல் சமிக்ஞையாக மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கத் தூண்டியுள்ளது.
ஹொங்கொங்கில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடற்கரையிலும் உயரமான பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த சூறாவளி, இடியுடன் கூடிய மழை மற்றும் அதிகளவு கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், குறிப்பாக, கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவேண்டும், கரையோர நீர்ப் பகுதிகளில் எதுவித செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.