Paristamil Navigation Paristamil advert login

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரில் நடந்தது என்ன?

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரில் நடந்தது என்ன?

22 புரட்டாசி 2025 திங்கள் 16:39 | பார்வைகள் : 176


‘மெஹந்தி சர்கஸ்’ படம் மூலம் பரவலான கவனத்தை பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஆனால் அதற்கு முன்பே பிரபல சமையல் கலைஞராக பலராலும் கவனிக்கப்பட்டார். இவரது மனைவி ஸ்ருதி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை பிரிய போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டு முன்வைத்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும். அவர் முதல் மனைவியோடு தொடர்பில் இருப்பது எனக்கு தெரியாது. கடந்த 2ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்த புகார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்காக இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பின் ஜாய் கிரிஸில்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என பலரும் கூறுகிறீர்கள். அது தவறு. அவர் என்னை திருமணம் செய்துகொண்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதேபோல யூடியூப்பில் பலரும் அவதூறாக பேசுகிறார்கள். இதனால் தான் பலரும் வெளியில் வந்து கருத்து சொல்ல பயப்படுகிறார்கள். நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். என்னை பற்றி அவதூறு பரப்பாதீர்கள்” என்றார்.

மேலும், “நான் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். சட்டப்படியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். என்னை தான் பலரும் குற்றம்சாட்டுகிறீர்களே தவிர, மாதம்பட்டி ரங்கராஜிடம் எதுவும் கேட்பதில்லை” என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்