கருணாநிதி சிலை அமைக்க கோரிய தமிழக அரசின் மனு; உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

23 புரட்டாசி 2025 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 151
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவாயில் அருகே, கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க, வள்ளியூர் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
தொகுதி சட்டசபை உறுப்பினர் நிதியின் கீழ், சிலையை நிறுவுவதற்கான ஒப்புதலையும் அரசிடம் இருந்து பேரூராட்சி பெற்றது.
இந்நிலையில், கருணாநிதி சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பால்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கருணாநிதி சிலைக்கு அனுமதி மறுத்ததோடு, பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் பிற சிலைகளை அகற்றவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
உத்தரவில், 'ஒரு தலைவரின் புகழை பரப்ப, நிறுவப்படும் சிலை, பொது இடத்தில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என கருதியே, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, அந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர்.