10 நகரங்களில் பாடசாலை, வணிகங்கள் என அனைத்தையும் மூட உத்தரவிட்ட சீனா

23 புரட்டாசி 2025 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 183
குறைந்தது 10 நகரங்களில் பாடசாலைகள் மற்றும் வணிகங்களை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தெற்கே சூப்பர் டைபூன் ரகசா நெருங்கி வருவதை அடுத்தே, செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
மேலும் சீனாவின் உற்பத்தி மையப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளின் செயல்பாடுகளையும் பாதிக்கும். மாகாணத்தின் அவசரநிலை மேலாண்மை பணியகம் செவ்வாய்க்கிழமை காலை தெரிவிக்கையில்,
ரகாசா புயல் 24 மணி நேரத்திற்குள் குவாங்டாங்கின் மத்திய மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரகசா புயல் நெருங்கி வருவதையடுத்து, மணிக்கு 230 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதால், குவாங்டாங் மாகாணத்தில் அதிகபட்ச அவசரகால நிலை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஷென்சென் தொழில்நுட்ப மையம் 400,000 மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
நகரின் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் தெரிவிக்கையில், கடுமையான காற்று, மழை, அலைகள் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.
மேலும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்பவர்களைத் தவிர, சாதாரண மக்கள் எவரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்தும் பிற முக்கிய நகரங்களில் ஜுஹாய், டோங்குவான் மற்றும் ஃபோஷான் ஆகியவை அடங்கும்.
பலத்த காற்று, கடுமையான மழை உள்ளிட்டவை நகரின் பெர்ரும்பகுதியை பாதிக்கும் என்று ஃபோஷான் நகர அவசர சேவை நிர்வாகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் சில பகுதிகளைத் தாக்கிய ரகசா புயல் தற்போது தென் சீனக் கடலைக் கடந்து செல்கிறது.
இதனிடையே, வடக்குப் பகுதியிலும், தைவான் ஜலசந்தியின் தெற்குப் பகுதியிலும், பாஷி கால்வாயிலும், குவாங்டாங்கின் அருகிலுள்ள கரையோர நீர்நிலைகளிலும் இயங்கும் கப்பல்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.