Paristamil Navigation Paristamil advert login

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம் - பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம் - பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

23 புரட்டாசி 2025 செவ்வாய் 11:16 | பார்வைகள் : 124


சவூதி அரேபிய இராச்சியம் இன்று செப்டம்பர் 23ஆம் திகதி, தனது 95ஆவது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

1932ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சௌத் அவர்கள் தலைமையில் அரேபிய தீபகற்பத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் ஒருங்கிணைத்து இன்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் மைற்கல்லை எட்டுகிறது.

பாலைவன இராச்சியம் என்ற நிலையிலிருந்து, பாரம்பரியமும் நவீன மாற்றமும் சந்திக்கும் உலகளாவிய சக்தி வாய்ந்த நாடாக மாறிய சவூதி அரேபியாவின் கதை, நம்பிக்கை, இலட்சியம், மற்றும் எதிர்பார்புகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.


1932 செப்டம்பர் 23ஆம் திகதி, மன்னர் அப்துல் அசீஸ் தலைமையில், நீதி சார் கோட்பாடுகள், இஸ்லாமிய மார்க்க விழுமியங்கள் மற்றும் தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிராந்தியங்களை ஒரே அரசாக ஒருங்கிணைத்து உருவான நவீன சவூதி அரேபிய இராச்சியம், 20ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க தேசநிர்மாண வரலாறுகளில் ஒன்றாக திகழ்கிறது.

மன்னர் அப்துல் அஸீஸின் தொலைநோக்கு பார்வைக்கு அமைவாக, சவூதி அரேபியா வெகுவிரைவில் இஸ்லாமிய உலகின் மத்தியதளமாக அங்கீகாரமும் பெற்றது.

உலகின் மிகப் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை தாயகமாகக் கொண்ட இந்த இராச்சியம், ஆண்டுதோறும் ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடுகளுக்காக கோடிக்கணக்கான யாத்திரிகர்களை ஈர்த்தது, ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

இந்த ஆன்மீகத் தலைமையே, சவூதியின் அடையாளத்தின் அடித்தளமாக இருப்பதோடு, அதன் உள்நாட்டு கொள்கைகளையும் சர்வதேச பங்கையும் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

இன்று, இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சவூதி அரேபியா புரட்சிகரமான மாற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விஷன் 2030 திட்டம், எண்ணெய்க்குப் பொருளாதாரத்துக்கு அப்பால் பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்தி, சவூதி அரேபியாவை புதுமைகள், சுற்றுலாத் துறை, மற்றும் நிலைத்தன்மை ஆகியவையின் மையமாக நிலைநிறுத்திய ஒரு புரட்சிகரமான திட்டமாக திகழ்கிறது.

பொருளாதார பன்முகப்படுத்தல்: புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பொழுதுபோக்கு, மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சவூதியின் பொருளாதாரம் விரிவடைந்துள்ளது. இன்று சவூதி அரேபியா, ஜி20 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக திகழ்கிறது.


நியோம் மெகா நகரத் திட்டம்: சவூதியின் வடமேற்கு பாலைவனத்தில் உருவாகி வரும், 500 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அதி நவீன நகரம். முன்னேற்றமான தொழில்நுட்பத்தையும், நிலைத்த வாழ்வியலையும் ஒருங்கிணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சவூதி கலாசார மறுமலர்ச்சி: திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு பொழுது போக்குத் துறை விரிவாக்கப்பட்டுள்ளது, உலகப் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்தும் சவூதி தலைமை தாங்கி நடத்தி வருகிறது இதில் மிக முக்கியமாக 2034 FIFA கால்பந்தாட்ட போட்டிகளை சவூதி நடாத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சவூதிக்கே உரித்தான  பாரம்பரிய தளங்களைப் புதுப்பித்தல் மூலம் கோடிக்கணக்கான சர்வதேச பயணிகளை ஈர்த்துள்ளது.

பெண்களுக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தல்: சவூதியை பொருத்தமட்டில் பெண்கள் இப்போது தொழில்துறையின் ஓர் அங்கமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது, அத்தோடு பெண்களுக்கு வணிகங்களை வழிநடாத்திச் செல்லவும் மேலும் பல துறைகளிலும் அவர்களுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அந்நாட்டுப் பெண்கள் தேசிய முன்னேற்றத்தில் இதுவரை இல்லாத வகையில் பங்காற்றுகின்றனர்.

பசுமை சவூதி & பசுமை மத்திய கிழக்குத் திட்டங்கள்: பில்லியன் கணக்கான மரங்களை நடுதல், கார்பன் உமிழ்வை குறைத்தல் போன்ற திட்டங்கள் மூலம், உலகளாவிய காலநிலை மாற்றத்தில் சவூதி அரேபியாவின் பங்கினை இத்திட்டங்கள் வலியுறுத்துகிறது.


இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தோடு மாத்திரம் சுருங்கிவிடுவனவல்ல — இவை சவூதியின் அடையாளத்தின் மறுவடிவமைப்பாகும். பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளது போல, சவூதி அரேபியா “உற்சாகமும் திறந்த மனப்பான்மையும் கொண்ட சமுதாயமாக தனது பாரம்பரிய வேர்களை நோக்கி திரும்புகின்ற அதே நேரம் தனது இஸ்லாமிய மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்களை பெருமையுடன் காக்கின்றது”.

இந்த ஆண்டின் தேசிய தின கொண்டாட்டங்களை ஊக்கமூட்டும் வகையில் “எங்கள் பெருமைகள், எங்கள் இயல்பில்” என்ற மகுடவாசகத்தின் கீழ் நடைபெறுகிறது. இந்த கருப்பொருள், இராச்சியத்தின் விழுமியங்களான — விருந்தோம்பல், ஒற்றுமை, தாராளத் தன்மை, உயர் நோக்கங்கள், மற்றும் உண்மைத்தன்மை — ஆகியவற்றுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பை பிரதிபலிப்பதோடு, அதன் தனித்துவமான இயற்கை நிலப்பரப்பையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.


நாடு முழுவதும் தேசிய தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பல நிகழ்விகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன


சவூதி ஹோக்ஸ் நடத்தும் வானூர்தி சாகச நிகழ்ச்சிகள், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வானத்தை அலங்கரிக்கவுள்ளன.

ரியாத், ஜித்தா, தம்மாம் நகரங்களின் கோலகலமாக வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு.

வாளகளையும், கவிதைகளையும் பயன்படுத்தி தாளங்களோடு தேசிய பெருமைகளைப் பாடி நடனம் ஆடும் சவூதிக்கே உரித்தான “அர்தா நடனம்” உட்பட பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளும் நாடு பூராகவும் அரங்கேறவுள்ளன.

அல்உலாவில் நடைபெறும் “அசிமுத் விழா” போன்ற இசை மற்றும் கலாச்சார திருவிழாக்கள், அற்புதமான பாறை அமைப்புகளின் மத்தியில் சர்வதேச கலைஞர்களின் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

சவூதி கொடிகளைக் கொண்டமைந்த பொது அலங்காரங்கள், தேசபக்தி கோஷங்கள், மற்றும் மின்விளக்குகள் அனைத்தும் நகரங்களை ஒளிரும் “ஒளிக் கடல்களாக” மாற்றவுள்ளன.

சவூதி மக்களுக்கு தேசிய தினம் என்பது ஒரு பண்டிகைக் கொண்டாட்டத்தை விட அதிக முக்கியம் வாயந்ததாகும் — அந்நாளை அந்நாட்டு மக்கள் ஒரு அடையாளம், ஒற்றுமை, மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய அசைக்க முடியாத பயணத்தின் மீள் உறுதிப்பாடாக பாரக்கின்றனர்.

சவூதி அரேபியாவும் இலங்கையும், பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். அவர்கள் இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் முக்கிய பங்களிப்பு செய்யும் சக்தியாகவும், இரு நாடுகளையும் இணைக்கும் உயிர்ப்பான பாலமாகவும் திகழ்கின்றனர்.

சவூதி அபிவிருத்தி நிதியம் (SFD), இலங்கையின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அது அடிப்படை வசதிகள், கல்வி, மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்காக மானியங்களும் வட்டியில்லா கடன்களையும் வழங்கி ஆதரவு செய்துள்ளது. இதற்குப் பதிலாக, அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளில் நம்பகமான கூட்டு நாடாக செயல்படும் சவூதி அரேபியாவின் பங்கினை இலங்கை எப்போதும் உயர்ந்த மதிப்புடன் பாராட்டி வருகிறது.

கலாச்சார மற்றும் மத ரீதியாக, சவூதி அரேபியா இலங்கை முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆன்மீக பிணைப்பு, இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் உறுதிப்படுத்துகிறது.

சவூதி அரேபியாவின் 95ஆவது தேசிய தினத்தினை முன்னிட்டு இலங்கை வாழ்த்துக்களை தெரிவிக்கும் இந்நேரத்தில், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வர்த்தகம், மற்றும் பண்பாட்டு பரிமாற்றம் போன்ற துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புகளையும் எதிர்நோக்குகிறது.

இந்த 95ஆவது தேசிய தினத்தில், சவூதி அரேபியாவின் இராச்சியத்தையும், அதன் தலைமையையும், மக்களையும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கிறோம். சவூதி அரேபியா மற்றும் இலங்கையின் உறவு வளமாக வளர்ந்து, இரு நாடுகளுக்கும் செழிப்பும் அமைதியும் கொண்டு வரவும் பிரார்த்திக்கிறோம்.

நன்றி virakesari

வர்த்தக‌ விளம்பரங்கள்