முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விஜய் கருத்தை வரவேற்கிறேன்: அண்ணாமலை

24 புரட்டாசி 2025 புதன் 06:40 | பார்வைகள் : 100
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் பாஜ பி டீம் என கூறுகின்றனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: அரசியல் நிலவரம் குறித்து தினகரனிடம் பேசினேன். மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினேன். கோரிக்கை ஏற்பதும், ஏற்காததும் தினகரனின் விருப்பம். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. தினகரனை சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வலியுறுத்தினேன். இன்னும் காலம் இருக்கிறது. காத்திருப்போம்.
அது மாறும்
சின்ன சின்ன மனஸ்தாபங்கள் எல்லாமே கடைசியாக தேர்தல் களத்தின் சூடு வரும் போது அது மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதேநேரத்தில் 2024ல் நம்மை நம்பி வந்த தேஜ கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாத்தையும் நான் மதிக்க கூடியவன். டிடிவி தினகரன் முடிவுக்காக டிசம்பர் வரை காத்திருப்போம்.கேரளாவில் அரசியல் களம் வேறு. அங்கு பாஜ கட்சியினரை கொடுமைப் படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியால் பாஜ கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் இழந்து இருக்கிறோம்.
பாஜ பி டீம்
ஓபிஎஸ் தற்போது பயணம் செய்து வருகிறார். அதனை முடிக்கும் போது அவரையும் சந்திப்பேன். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன். தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் பாஜ பி டீம் என கூறுகின்றனர். கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? இந்தப்பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுகவின் பழைய சரித்திரம் அப்படி.
கப்பல் கட்டும் தளத்துக்கான மத்திய அரசின் நிதியை மறைப்பது ஏன்?
என்ன தயக்கம்?
ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 2 நிறுவனங்களும், மத்திய அரசு நிறுவனங்கள். மத்திய அரசு நிறுவனங்கள் தான் முதலீடு செய்கிறது என்று சொல்வதில், திமுக அரசுக்கும், தொழில் துறை அமைச்சருக்கும் என்ன தயக்கம்? மத்திய அரசின் நிறுவனத்தை மறைத்து தனியார் நிறுவனம் என்று எத்தனை மறைத்து வண்டி ஓட்ட முடியும். சபாநாயகர் அப்பாவு அரசியல் செய்து வருகிறார். நாட்டில் அரசியல் செய்வதில் அப்பாவுக்கு முதலிடம்.
வெளிப்படையாக…!
சட்டசபையில் திமுக குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவதை விட அப்பாவு தான் அதிகமாக பேசுகிறார். அவர் (அப்பாவு) அரசியல் பற்றி பேசுவது தவிர்ப்பது நலம். அவருடைய கடமையை திறம்பட செய்ய வேண்டும். நான் ரஜினியை அடிக்கடி சந்திப்பேன். அவர் ஆன்மிகம் குறித்துப் பேசுவார். சில அறிவுரைகள் கூறுவார். அவரை குருவாகப் பார்க்கிறேன். வெளிப்படையாக எனது கருத்துகளைப் பேசி வருகிறேன். யாரையும் ஒளிந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
எனது குரு
ரஜினியை அடிக்கடி போய் சந்திப்பது நட்பு அடிப்படையில் தான். மல்லிகார்ஜூன கார்கே ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி முதலில் ஜிஎஸ்டியை கொண்டு வரும் போது எல்லா மாநிலங்களும் கான்ஸ்டியூசனல் கேரண்டி கொடுங்கள் என்று கேட்டது. அதனை காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. மோடி வந்த பிறகு 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டியை கான்ஸ்டியூசனல் கேரண்டி கொடுத்தோம். பின்னர் எல்லா மாநிலங்களும் ஒருமித கருத்துடன் ஜிஎஸ்டியை கொண்டு வந்தோம்.
கார்கேவுக்கு இது அழகல்ல
4 அடுக்குகளாக வசூலிக்கப்பட்ட பணம் மாநில அரசுக்கு தான் வந்தது. இன்றைக்கு மல்லிகார்ஜூன கார்கே போன்ற மூத்த தலைவர்கள், கிட்டத்தட்ட 80 வயதிற்கு மேல் இருப்பவர்கள், 60 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவர்கள். முக்கியமாக ஒரு கட்சியை சார்ந்தவர்கள்,காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் அவர் முன்னுக்கு புரணாக பேசுவது அழகல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.