Paristamil Navigation Paristamil advert login

அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி., 2.0: குறைந்தது மக்களின் வரிச்சுமை

அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி., 2.0: குறைந்தது மக்களின் வரிச்சுமை

24 புரட்டாசி 2025 புதன் 10:46 | பார்வைகள் : 102


மத்திய அரசு, 'ஜி.எஸ்.டி., 2.0' சீரமைப்பை அறிமுகம் செய்து, 5,12,18, 28 சதவீதம் என்றிருந்த 4 அடுக்கு வரியை 5, 18 என இரு அடுக்குகளாக குறைத்து, நேற்றுமுதல் அமலாகியுள்ளது. 90 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிவிதிப்புக்குள் வந்துள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 33 விதமான உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு முழு வரிவிலக்கு ; அதாவது, 'ஜீரோ' வரி. சில உணவுப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் பயன் குறித்து ஆடிட்டர் ஜலபதி கூறியதாவது: ஜி.எஸ்.டி., 2.0 வரி சீர்திருத்தம், மக்களின் சுமையை இன்னும் குறைத்துள்ளது. உதாரணமாக, 350 சி.சி., வரையிலான பைக்குகள், மலிவு விலை கார்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு முன் இருந்த வாட் உள்ளிட்ட சிக்கலான வரி விதிப்பு முறையோடு ஒப்பிட்டால், நேற்று முதல் அமலாகிஉள்ள வரி விதிப்பின் நன்மைகள் பெரிது என்பதை உணரலாம்.

வரிக்குறைப்பின் நன்மைகள்


மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் மீதான வரிக்குறைப்பால், மருத்துவ செலவு குறைந்துள்ளது. அரிதான நோய்களுக்கான மருந்தின் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து ஜீரோ ஆக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கான 33 மருந்துகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து ஜீரோவாக குறைக்கப்பட்டுள்ளது.

அனெஸ்தெடிக்ஸ், ஆக்சிஜன், மருந்துகள் போன்ற 7 பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பொருட்கள், உபகரணங்கள் 12 முதல் 18 சதவீதமாக இருந்த முக்கியமானவற்றுக்கு, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், எளிதில் சிகிச்சை பெறுவதும், நோய்த் தடுப்பு, நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் போன்றவை எளிதாகும். மருத்துவ, ஆயுள், பொதுக் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் சிகிச்சை செலவு குறைகிறது.

இதர துறைகள்


சிமென்ட், மணல், சுண்ணாம்பு, செங்கற்கள் போன்றவற்றின் மீதான வரிக்குறைப்பு, உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி, கட்டுமானச் செலவுகளைக் குறைக்கிறது.

ஜவுளித் துறையில் நுகர்வும், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். பல்வேறு நுகர்பொருட்களின் விலை குறைவால், ஏழை, நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். வேளாண் துறையில், டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகள், இடுபொருட்களின் விலை குறைந்து, விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வாறு, அனைத்துத் துறை சார்ந்தும் வரிக்குறைப்பின் தாக்கம் பொதுமக்களுக்கு நன்மையைத் தரும் விதத்தில் உள்ளது.

ஒரே வரியாக மாறலாம்!


ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்தபின், நாட்டின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. வரி சீரமைப்பால், முழுமையான கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது முறையாக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. இதனால் விளைந்த பலனை, மக்களுக்கே திருப்பி அளிக்க, அரசு வரி அடுக்கை 2 ஆக குறைத்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, முறையான வரி செலுத்துவது தொடருமானால், அதன் பலன் மீண்டும் மக்களுக்கே கிடைக்கும். இந்த 2 வரி அடுக்கு ஒரே வரி விகிதமாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜி.எஸ்.டி., 2.0 என்பது இந்திய பொருளாதார பயணத்தில் மிக முக்கியமானதொரு மைல்கல். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வரி வருவாய்


தமிழகம் மற்றும் இந்தியாவின் வரி வருவாய் (ரூ.கோடிகளில்) 
* ஜிஎஸ்டிக்கு முன் (2016-2017) 
* தமிழகம்- 31,304.25

இந்தியா- 3,91,930.5 
* ஜிஎஸ்டிக்கு பின் (2024-2025) 
* தமிழகம்- 1,31,115

இந்தியா- 22,08,861

இது தீபாவளி பரிசு: மக்கள், வர்த்தக நிறுவனத்தினர் மகிழ்ச்சி

மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது, மத்திய அரசு மக்களுக்கு அளித்துள்ள, தீபாவளி பரிசு என்று குதுாகலிக்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்