Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!

தி.மு.க., எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அசைன்மென்ட்!

24 புரட்டாசி 2025 புதன் 11:38 | பார்வைகள் : 133


சட்டசபை தேர்தல் பணிகளில், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு புதிதாக, 'அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளில், வாரத்தில் நான்கு நாட்கள் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை அதுதொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சட்டசபை தேர்தலில் தோல்வியே காணக்கூடாது என்றும் கட்டளையிட்டு உள்ளார். சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது; 31 எம்.பி.,க்கள் பங்கேற்றனர். பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி பங்கேற்றனர்.

மக்கள் பணிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:

'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' போன்ற முகாம்களில் பங்கேற்று, மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத் துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

மகளிர் உரிமை திட்டத்தில், விடுபட்டோரை சேர்க்க வேண்டும். நலத்திட்ட முகாம்களில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த, 2024-ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 40-க்கு 40 தொகுதிகளை வென்று, வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு எம்.எல்.ஏ.,க்கள் அரும்பாடுபட்டனர். அதேபோல, வரும் சட்டசபை தேர்தலில், லோக்சபா எம்.பி.,க்களும் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

எம்.பி.,க்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களை தொடர்ச்சியாக சந்திக்க வேண்டும்.

அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து, கட்சி பணிகளை செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் நாட்களை தவிர்த்து, குறைந்தது வாரத்தில் நான்கு நாட்கள், எம்.பி.,க்கள் தங்கள் தொகுதியில் தங்கி, மக்கள் பணிகளை செய்ய வேண்டும்.

தங்கள் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணிகள், பார்லிமென்டில் எடுத்துரைத்த கருத்துகள் பற்றிய அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒருமுறை ஒப்படைக்க வேண்டும்.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை சந்தித்த தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வந்துள்ளோம். வரும் சட்டசபை தேர்தலிலும், அதை தக்கவைக்க வேண்டும். நாம் தோல்வியே காணக்கூடாது.

இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்