விஜயை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு தடை

24 புரட்டாசி 2025 புதன் 07:40 | பார்வைகள் : 202
தி.மு.க., அரசை விமர்சித்து வரும் த.வெ.க., தலைவர் விஜயை பற்றி பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்காக, 'மக்கள் சந்திப்பு பயணம்' துவக்கி உள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும், இரண்டு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அவர், செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக அரசை விமர்சித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க., நடத்தி வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' கூட்டத்தில் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து பேசுவதற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதித்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, 'த.வெ.க., குறித்து பேசக்கூடாது என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்' என மேலிடத்தின் உத்தரவை வெளிப்படையாக அறிவித்தார்.
'திருவாரூரில் தி.மு.க.,முதன்மைச்செயலாளர் கே.என். நேரு பேசும் போது, 'எனது வாய் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்ட நிலையில் மேடையில் நிற்கிறேன்' என்றார். விஜய் நடத்திய கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பூண்டி கலைவாணன், பெரிய கூட்டத்தைக் கூட்டினார். தி.மு.க., மேலிடத்தின் உத்தரவு தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறுகையில், 'மாநில அரசின் சாதனையை எடுத்துக்கூறுவதும் மற்றும் மத்திய அரசு தரும் தொந்தரவை விளக்குவதுமே எங்களின் நோக்கம். மற்ற விஷயத்தை பற்றிப் பேசுவது கவனத்தை சிதறடிக்கும்' என்றார்.