தி.மு.க., ஆட்சியில் நடந்தது வரி உயர்த்தி சாதனை!: பழனிசாமி

25 புரட்டாசி 2025 வியாழன் 12:52 | பார்வைகள் : 102
தமிழகத்தில் 100 சதவீதம் வரியை உயர்த்தியது தான், தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனை. ஆனால், 'ரோல் மாடல் ஆட்சி' என, துணை முதல்வர் உதயநிதி பெருமைப்பட்டு கொள்கிறார். ஊழல் செய்வதில், பொய்யான வாக்குறுதி அளிப்பதில் தான், இந்த ஆட்சி ரோல் மாடலாக உள்ளது,'' என, நீலகிரியில் நடந்த பிரசாரத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார். 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரப் பயணத்தை, மாநிலம் முழுதும் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார பயணத்தில், பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் 16 மருத்துவக் கல்லுாரிகள், 67 அரசு கலைக் கல்லுாரிகள், 21 பாலிடெக்னிக்குகள் துவங்கப்பட்டன.
தி.மு.க., ஆட்சியில், ஒரு மருத்துவக் கல்லுாரி கூட துவங்கவில்லை. ஸ்டாலின் ஆட்சியை, 'ரோல் மாடல் ஆட்சி' என்று துணை முதல்வர் உதயநிதி பெருமையாக பேசி வருகிறார்.
கடன் வாங்குவதில், ஊழல் செய்வதில், குடும்ப வாரிசு அரசியல் செய்வதில், பொய்யான வாக்குறுதி அளிப்பதில், இவர்கள் ரோல் மாடலாக உள்ளனர். 10 கோடி மக்களின் உழைப்பை, ஒரு குடும்பம் சுரண்டுகிறது; இதை இனியும் மக்கள் அனுமதிக்க கூடாது.
ஒட்டு போட்ட சட்டை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பல கட்சியில் இருந்து வந்தவர். பிச்சைக்காரர்கள் ஒட்டு போட்ட சட்டை போட்டிருப்பர்; அதுபோல் பல கட்சிக்கு போயிருக்கிறார்.
எந்த கட்சிக்கு போகிறாரோ, அந்த கட்சியின் கொள்கையை கடைப் பிடிக்கிறார். அந்த கட்சியை அவர் வளர்க்க பார்க்கவில்லை. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அழகிரியும் ஒரு கருத்தை சொல்கின்றனர்.
ஆனால், செல்வப் பெருந்தகை, 'ராகுலே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; நீங்களும் கேட்காதீர்' என்கிறார். உண்மையிலே காங்கிரஸ் கட்சி தொண்டராக இருந்தால், கட்சி மீது பற்று இருந்தால், இப்படி பேசும் எண்ணம் வந்திருக்காது. காங்கிரஸ் கட்சிக்கு, அவர் விசுவாசமாக இல்லை; தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருக்கிறார்.
ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்று கோஷத்தை எழுப்பி விட்டனர். தி.மு.க., கூட்டணியில் பிளவு ஆரம்பமாகி விட்டது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, கூட்டணியை நம்பியில்லை; மக்களை நம்பியிருக்கிறது.
அடிமைகள் தி.மு.க.,வோ கூட்டணியை நம்பியிருக்கிறது. தி.மு.க.,வில், கூட்டணி கட்சிகள் அடிமைகளாக உள்ளன. அ.தி.மு.க., யாருக்கும் அடிமையாக இருக்காது; கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்தாது.
விலைவாசி விண்ணை முட்டி விட்டது. ஏழை மக்களை வேதனையில் இருந்து காக்க, விலைவாசியை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு முயலவில்லை.
ஆட்சிக்கு வரும் முன், 'சொத்து வரியை உயர்த்த மாட்டோம்' என்றனர். குடிநீர் வரி, வீட்டு வரி, சொத்து வரி என எல்லா வரிகளையும், 100 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி விட்டனர். போதாக் குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு, தி.மு.க., அரசு தான். இது தான் தி.மு.க., ஆட்சியில் நடந்த சாதனை; வேறு எதுவும் இல்லை.
கடந்த 52 மாத தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.