இளையோர் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

25 புரட்டாசி 2025 வியாழன் 10:53 | பார்வைகள் : 111
வைபவ் சூர்யவன்ஷி இளையோர் கிரிக்கெட்டில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கி, 35 பந்துகளில் சதமடித்து கிரிக்கெட் உலகை திரும்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்று வரும் 2வது ஒரு நாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 49.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து, 300 ஓட்டங்கள் எடுத்தது.
இதில், அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்கோத்ரா இருவரும் தலா 70 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதில், 68 பந்துகளில், 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்த வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி இந்த 6 சிக்சருடன், இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக மொத்தம் 41 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.
முன்னதாக உன்முகுந்த் சந்த், 21 போட்டிகளில் விளையாடி 38 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை 10 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் 40 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.