தோலை மினுமினுப்பாக்கும் திரிபலா
11 மார்கழி 2020 வெள்ளி 08:48 | பார்வைகள் : 9734
திரிபலா என்பது அற்புதமான மருந்து. உலகம் முழுவதும் ஆயுர்வேத, சித்த மருத்துவர்களால், பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை காயகல்பமாகி, நோய்களை தீர்க்கும் அற்புத சக்தியை பெற்றுள்ளது.
திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரண கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா இருப்பவர்களுக்கு ஏற்றது. தோலில் அரிப்பு, கருமை, சிவப்பு புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தை தடவிவந்தால் விரைவில் சரியாகும்.
தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது. காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்கு போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக்கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணத்தைக் கலந்து, காலை நேரத்தில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
கடுக்காயை ஹரீதகி என்று அழைப்பார்கள். இதற்கு விஜயா, அமிர்தா, காயஸ்தா, ஹேமவதி, பத்யா, சிவா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. பிராணனை அளிக்க வல்லதால், இதனை பிராணதா என்றும் அழைப்பார்கள். அறுசுவையில் உப்பை தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது.
கடுக்காயின் விதைப்பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகை உள்ளதாக சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகிணி, திருவிருதுதம். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை ஆகியவற்றை பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனவும் உள்ளன.