Paristamil Navigation Paristamil advert login

2029க்குள்! வடமாநில பெரிய நதிகள் இணைப்பு

2029க்குள்! வடமாநில பெரிய நதிகள் இணைப்பு

26 புரட்டாசி 2025 வெள்ளி 14:35 | பார்வைகள் : 101


வடமாநிலங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சிந்து நதி நீரோட்டத்தை மிகப் பெரிய அளவில் மடைமாற்ற மத்திய அரசு தயாராகி வருகிறது;

2029 லோக்சபா தேர்தலுக்குள் இந்த பிரமாண்ட திட்டத்தை முடிக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது. இதனால், 'ஒரு பக்கம் கரைபுரண்டோடும் வெள்ளம், மறுபக்கம் வறண்டு கிடக்கும் நிலங்கள் என தண்ணீரால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை, கடந்த ஏப்ரலில் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் கதறிய நிலையில், 'தண்ணீரும் ரத்தமும் ஒருசேர கலந்து ஓட முடியாது' என பிரதமர் மோடி பதிலடி கொடுத்திருந்தார்.

அப்போதே, சிந்து நதி நீரை மீண்டும் பாகிஸ்தானுக்கு தரும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கப்போகிறது என்பது தெளிவானது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உலக வங்கியிடம் பாகிஸ்தான் முறையிட்டது. ஆனாலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி, இவ்விஷயத்தில் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது.

இந்த சூழ்நிலையில்தான், சிந்து நதிநீர் பயன்பாடு குறித்து, டில்லியில் மிக முக்கியமான ஆலோசனை கூட்டத்தை கடந்த வாரம் மத்திய அரசு நடத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் உயர் அதிகாரிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். டில்லியில் ஓடும் யமுனை நதியும், இத்திட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பதால், இந்த கூட்டத்திற்கு, டில்லி முதல்வர் ரேகா குப்தாவும் அழைக்கப்பட்டிருந்தார்.


அப்போது பியாஸ் நதியுடன், சிந்து நதி நீரை இணைக்க, 14 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டதாக கூறப்பட்டது. மேலும், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள், 'எல் அண்டு டி' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டிற்குள் இந்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இமயமலை பகுதியில், 14 கி.மீ., துாரத்திற்கு பாறைகளை குடைந்து கால்வாய் அமைப்பதும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்வதும் தான், சவாலாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக கால்வாய் அமைக்கும்போது பலவீனமான பாறைகள் குறுக்கிட்டால், குழாய் அமைத்து, அதன் வழியாக நீரை கடத்த வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர். இப்படி, தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் பாதைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், டில்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் வருங்கால தண்ணீர் தேவை குறித்த தகவல்களும் பரிமாறப்பட்டன. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், இந்த திட்டப்பணிகளை முடிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2029 லோக்சபா தேர்தலுக்கு முன், சிந்து நதிநீரை வடமாநிலங்களுக்கு கொண்டு வந்து விட வேண் டும் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதனால், சிந்து நதிநீர் விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்