96 படத்தின் இரண்டாம் பாகம் ஏன் நடக்கவில்லை?

26 புரட்டாசி 2025 வெள்ளி 14:32 | பார்வைகள் : 156
96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட ரிலீஸின் போதே அவர் தன்னுடைய அடுத்த படம் 96 படத்தின் இரண்டாம் பாகம் என அறிவித்தார்.
இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோரே நடிப்பார்கள் என்றும் இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டு தற்போது ஃபஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் 96 படத்தின் இரண்டாம் பாகம் ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “ நான் எழுதியதிலேயே சிறந்த திரைக்கதையாக 96 இரண்டாம் பாகம் வந்துள்ளது. என் நண்பர்கள் படித்துவிட்டு முதல் பாகத்தைவிட சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டினார்கள். தயாரிப்பாளர் திரைக்கதையைப் படித்துவிட்டே தங்க சங்கிலியைப் பரிசாகக் கொடுத்தார். ஆனால் ஒரு படம் நடப்பதற்கு சில விஷயங்கள் கூடி வரவேண்டும். விஜய் சேதுபதி தாடியோடு வர வேண்டும். ஆனால் அவர் இப்போது பிஸியாக உள்ளார். முதல் பாகத்தில் இருந்த எல்லோரும் நடிக்க வேண்டும். அதனால் திரைக்கதையை முடித்தாயிற்று. எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.