பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியலாளர்களுக்கு, தொழில்நுட்பவியலாளர்களுக்கு வலுவூட்டும் EngEx 2025 க்கு SLT-MOBITEL

26 புரட்டாசி 2025 வெள்ளி 15:02 | பார்வைகள் : 249
EngEx 2025 இன் பிரதான அனுசரணையாளராக இணைந்து கொள்வதற்கு SLT-MOBITEL ஏன் தீர்மானித்தது, இந்தப் பங்காண்மை நிறுவனத்துக்கு எதனைப் பிரதிபலிக்கின்றது?
அடுத்த தலைமுறையினரிடையே AI தொடர்பான புத்தாக்கங்களில் ஈடுபடும் புத்தாக்கவியலாளர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தும் வகையிலும், கல்வித்துறைக்கும் தொழிற்துறைக்கும் இடையே பாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும் இந்தக் கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக SLT-MOBITEL ஆகிய நாம் இணைந்துள்ளோம்.
தொழில்னுட்ப புத்தாக்கதை எவ்வாறு வணிகம் சார்ந்த தொழில்னுட்ப புத்தாக்கமாக மாற்றுவது என்பதில் SLT-MOBITEL ஆகிய நாம் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் அவ்வாறான செயற்பாடுகள் வெற்றிகரமானதாக அமைந்திருக்கும். புத்தாக்கமொன்றை ஒரு வணிகமாக எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது தொடர்பான வாய்ப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு வழங்கி, அதனூடாக அவர்களையும் தொழிற்துறையில் இணைத்து, தம்மை விருத்தி செய்து கொள்வதுடன், தேசத்தின் முன்னேற்றத்திலும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.
SLT-MOBITEL இனால் நவீன தொழில்னுட்பசார் சேவைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை பிரயோக ரீதியில் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்தக் கண்காட்சியுடன் கைகோர்ப்பதனூடாக வழங்கப்படுகிறது. SLT-MOBITEL ஒரு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனம் என்பதிலிருந்து, தொலைத்தொடர்பு - தொழில்னுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமாக நிலைமாற்றமடைந்துள்ளது. இந்தப் பிரிவில் நவீன தொழில்னுட்ப அம்சங்களான Cloud, IoT, AI போன்ற எல்லா அம்சங்களும் உள்ளடங்குகின்றன. அத்துடன், சைபர் பாதுகாப்பு விடயங்களிலும் SLT-MOBITEL கவனம் செலுத்துகிறது. அவ்வாறான நிலையில், இந்த கண்காட்சியுடன் கைகோர்ப்பதனூடாக SLT-MOBITELக்கும் தமது சேவைகளையும், தீர்வுகளையும் பல்வேறு துறையினருக்கு வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
⦁ விசேடமாக கொழும்புக்கு வெளியிலுள்ள இளம் புத்தாக்கவியலாளர்களுக்கு, தொழில்னுட்பத்தில் காணப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கு SLT-MOBITEL எவ்வாறு ஆதரவளிக்கிறது?
கொழும்பு நகரை மையப்படுத்தியதாக பெருமளவான புத்தாக்க, தொழில்னுட்பசார் தொழிற்துறைகள் இயங்கிய வண்ணமுள்ளன. ஏனைய நாடுகளை எடுத்துக் கொண்டால், தொழிற்துறைமயமாக்கல் என்பது ஒரு இடத்தை மாத்திரம் மையமாகக் கொண்டிராமல், பல சமூகங்களையும், பல பகுதிகளையும் சென்றடைந்து, புத்தாக்கமான முறையில் மேம்படுத்திய வண்ணமுள்ளது. அதனூடாக முழு நாடும், சகல மக்களும் புதிய தொழில்னுட்ப அம்சங்களுக்கு இசைவாக்கமடைவார்கள். அதனால், பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இவ்வாறான நிகழ்வினூடாக, சகல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் ஊக்குவிக்கும் என நாம் நம்புகிறோம். அந்தச் செயற்பாடுகளுக்கு SLT-MOBITEL இன் ஆதரவு கண்டிப்பாக காணப்படும்.
⦁ 5G, AI, மற்றும் IoT போன்ற எதிர்கால தொழில்னுட்பங்கள் தொடர்பில் மாணவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதற்கு EngEx 2025 இல் பங்கு கொள்வது எவ்வாறு உதவும்?
இந்தக் கண்காட்சியில் பேராதனை பொறியியல் பீடத்தின் அதிநவீன ஆய்வுகளையும், புத்தாக்கங்களையும் காட்சிப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன், தொழிற்துறையை சேர்ந்தவர்களின் சமீப கால தொழில்னுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் காட்சிப்படுத்தல்களும் அடங்கியிருக்கும். தொழில்துறைக்கும் கல்வித்துறைக்குமிடையிலான ஒரு தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக அமைந்திருக்கும். அதனூடாக துறைசார் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும் என நாம் கருதுகிறோம். AI மற்றும் IOT போன்ற தொழில்னுட்பங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது தொடர்பில் பங்குபற்றுனர்களுக்கு நேரடியான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதனூடாக தமது சிந்தனைகளை இந்த தொழில்னுட்பங்களுடன் இணைத்து பயன்படுத்தும் போது, எவ்வாறு வாடிக்கையாளர்களின் மத்தியில் கொண்டு செல்வதற்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பது பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்தக் கண்காட்சியில் SLT-MOBITEL இனால் பின்வரும் தொழில்னுட்ப சேவைகள் பற்றிய விளக்கங்களும் அவற்றை அனுபவிப்பதற்கான வசதிகளும் வழங்கப்படும். 5G கேமிங் பகுதி மற்றும் AR / VR உடன் தொடர்புடைய விளக்கங்கள், டிஜிட்டல் தயாரிப்புகள் (Kaspersky & play street) தயாரிப்பு வடிவமைப்பு – டிஜிட்டல், புரோட்பான்ட் (1G experience & FTTR experience) தயாரிப்பு வடிவமைப்பு – புரோட்பான்ட், டிஜிட்டல் தீர்வுகள் (Fleet management, SLT travel, IOT smart access control system, IOT power monitoring) மற்றும் Enterprise product – SDWAN, Cloud products –Enterprise & SME Product போன்றன அடங்கியிருக்கும். கண்காட்சி வளாகத்தில் 5G வலையமைப்பு வசதி வழங்கப்பட்டிருக்கும் என்பதுடன், பேராதனை பல்கலைக்கழகத்தில் 5G வலையமைப்புடன் இணைந்து கொள்ளும் எவருக்கும் 5GB மேலதிக டேட்டா கிடைப்பதுடன், FTTH 1 Gbps அனுபவத்தைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்படும்.
⦁ நிறுவனங்களின் பார்வையில், EngEx 2025 இல் காட்சிப்படுத்தப்படும் மாணவர் புத்தாக்கங்கள், இலங்கையின் தொழிற்துறைகள் மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு எவ்வாறு அனுகூலமளிக்கும்?
சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை பிரிவில் பெருமளவு புத்தாக்க செயற்பாட்டாளர்கள் அடங்கியுள்ளனர். இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 50சதவீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குவது இந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களாக அமைந்துள்ளனர். அவர்களுக்கு இந்தக் கண்காட்சி பெரிதும் பயனளிப்பதாக அமைந்திருக்கும் என நாம் நம்புகிறோம். அவர்களுக்கு இந்த தொழில்னுட்பங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக எடுத்துக் கொண்டால், இலங்கை விவசாயத்தில் தங்கியுள்ள ஒரு நாடு. விவசாயத்துறையில் புத்தாக்கமான தொழில்னுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் தீர்வொன்று, பெரியளவில் இயங்கும் நிறுவனத்துக்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு சூழல்கட்டமைப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். பெரியளவில் இயங்கும் ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்கு, அதன் பங்காளர் கட்டமைப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும். தற்காலத்தில் ஒரு தொழில்னுட்பத்தை மட்டுமல்ல, பல தொழில்னுட்பங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த தொழில்னுட்பங்களை பயன்படுத்தும் புத்தாக்கவியலாளர்களை பெரியளவிலான நிறுவனங்களும் பயன்படுத்தி பயன் பெறலாம் என நாம் கருதுகிறோம்.
⦁ EngEx 2025 இல் பங்கேற்க சமூகமளிக்கும் இளம் புத்தாக்கவியலாளர்கள் மற்றும் விருந்தினர்களுடன் எந்தத் தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள்?
பொறியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு செயற்திட்டம் என்பது மிகவும் முக்கியமானது. அவர்களின் செயற்திட்டம் ஒரு புதுவிடயமான கண்டுபிடிப்பு சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும், அக்காலத்தில் அவ்வாறான புத்தாக்கங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய களம் எதுவும் இருக்கவில்லை. அவ்வாறான புத்தாக்கங்கள், அந்த கற்றலுடன் நின்றுவிடும் நிலை காணப்பட்டது, மிகவும் சொற்ப அளவிலானவர்கள் மட்டுமே தமது செயற்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருந்தனர். தற்போது இவ்வாறான கண்காட்சிகள் போன்ற வாய்ப்புகள் கிடைப்பதனூடாக, எதிர்காலத்தில் அவர்களுக்கு தொழில்னுட்பங்களை பயன்படுத்தி, Techno – business வாய்ப்பை வழங்க வசதியளிக்கிறோம்.
கண்காட்சி நடைபெறும் இடத்திலுள்ள அனைத்து காட்சிகூடங்களுக்கும் 4G, விரிவாக்கப்பட்ட LEARN வலையமைப்பு திறன் மற்றும் FTTH சேவைகள் ஊடாக இணைப்பை வலுப்படுத்தவுள்ளோம். கண்காட்சி முழுவதும் பிரத்தியேக SLT-MOBITEL 5G Experience வலயங்கள் அமைக்கப்படுவதுடன் இதனூடாக பார்வையாளர்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்பை ஆராயவும், இணைந்தவுடன் 5GB இலவச தரவைப் பெறவும் வாய்ப்பளிக்கப்படும். மேலும், SLT-MOBITEL கூடத்தில் பார்வையாளர்கள் சமீபத்திய broadband, டிஜிட்டல் மற்றும் நிறுவன தீர்வுகளைக் கண்டறியலாம்.
கலாநிதி. எஸ்.கே. நவரட்ணராஜா – பன்மொழித்திறன் பேச்சாளர் - EngEX 2025, பேராதனைப் பல்கலைக்கழகம்
1. இலங்கையின் புத்தாக்கக் கட்டமைப்பை கட்டியெழுப்பவதில் EngEx 2025 போன்ற கண்காட்சிகள் எவ்வாறு பங்களிப்பு வழங்கும்?
இந்தக் கண்காட்சியின் முதன்மை நோக்கம், வருங்காலப் பொறியியல் தலைமுறைக்கு உத்வேகம் அளிப்பதாகும். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் கொட்டிக் கிடக்கும் அளப்பரிய வாய்ப்புகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர் மனங்களில் ஆர்வத்தைத் தூண்டி, புத்தாக்கத்தை முன்னெடுத்து, நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில் துறைகளைத் தேர்ந்தெடுக்க அவர்களை ஊக்குவிக்க விரும்புகிறோம்.
EngEx 2025 மாணவர் கண்காட்சியானது, மாணவர்களின் புதுமையான சிந்தனைகளை வகுப்பறைக்கு அப்பால் நடைமுறை பயன்பாடுகளுக்கு மாற்றும் ஓர் ஆய்வகமாக செயல்படுகிறது. இந்நிகழ்வு தேசிய அளவிலான தரநிலைகளை பின்பற்றி, மாணவர்களுக்கு புதுமையான முன்மாதிரிகளை உருவாக்குதல், ஆய்வுக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துதல், ஆராய்ச்சி வெளியீடுகளை பகிர்தல், மற்றும் சமகால பிரச்சினைகளுக்கான ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைத்தல் போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. இக்கண்காட்சி மாணவர்களின் கல்வி அனுபவத்தை வளப்படுத்தி, அவர்களின் திறமைகளை சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் வெளிப்படுத்த உதவுகிறது. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் தொழில் வல்லுநர்களை ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம், இந்தக் கண்காட்சிகள் தலைமுறைகளுக்கிடையேயான கற்றல் மற்றும் கூட்டு முயற்சிகளை தூண்டுகின்றன. பொறியியல் பீடமொன்றில் நடைபெறும் இவ்வாறான கண்காட்சி, அதனுடன் நேரடியாக தொடர்புபட்ட STEM கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, அதைத் தொடர்வதற்கும் மாணவர்களை ஊக்குவிக்கிறது.
2. இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்புப் பயணத்தில் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும்?
பல்கலைக்கழகங்கள் டிஜிட்டல் பரிணாமத்தின் அறிவுசார் முதுகெலும்பாக திகழ்கின்றன. அவை டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப்போகும் எதிர்கால பொறியியலாளர்கள், கணினி விஞ்ஞானிகள், மற்றும் புத்தாக்குனர்களைத் தயார்படுத்துகின்றன. AI, Data Science மற்றும் IoT போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பாடத்திட்டத்திலும் ஆய்வுகளிலும் இணைப்பதன் மூலம், பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன்களையும் வழங்குகின்றன.
3. EngEx 2025 போன்ற கண்காட்சிகளின் வெற்றிகரமான செயற்பாடுகளில், SLT-MOBITEL போன்ற தொழிற்துறை பங்காளர்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும்?
பிரதான அனுசரணையாளராக SLT-MOBITEL இன் ஆதரவு, EngEx 2025 போன்ற ஒரு பல்கலைக்கழக கண்காட்சி தளம் செழுமை பெற தேவையான உட்கட்டமைப்பு மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் செல்வதையும் உறுதி செய்கிறது. நிதி ஆதரவுக்கு அப்பால், தொழில்துறை பங்காளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம், வழிகாட்டல் மற்றும் உண்மையான தொழிற்சந்தை நிலைவரங்களை தெரிந்துகொள்வற்குமான வாய்ப்புகளையும் வழங்குகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் புத்தாக்கங்களை தொழில்துறை தரநிலைகளுக்கேற்ப மேம்படுத்த முடிகிறது. இந்த ஒத்துழைப்பு கல்விக்கும், தொழில்துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
4. பரந்தளவு பின்புலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிஜ-உலகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்வாறு ஊக்குவிப்புகளை வழங்குகிறீர்கள்?
EngEx 2025 மூலம் கிராமப்புறப் தோட்டப்புறப் பாடசாலைகள் மற்றும் பின்தங்கிய பின்னணிகளைக் கொண்ட மாணவர்களைப் பொறியியலுடன் ஈடுபடுத்த நாங்கள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம். மாணவர்களின் முயற்சியிலும் அவர்களின் கண்டுபிடிப்புகளிலும் ஊடாக குறைந்த செலவிலான நீர் சுத்திகரிப்பு திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகள், மற்றும் எளிதில் அணுகக்கூடிய டிஜிட்டல் கருவிகள் போன்ற சமூக அடிப்படையிலான பிரச்சினைகளுக்கான புத்தாக்கங்களை உருவாக்கி காட்சிப்படுத்துவதன் மூலம், தொழில்நுட்பம் எவ்வாறு நேரடியாக வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை மாணவர்கள் உணர்வதற்கான வழிவகைகளை செய்துவருகிறோம். எம்மால் மேற்கொள்ளப்படும் வழிகாட்டல் திட்டங்கள், செயன்முறை பட்டறைகள், மற்றும் தொழிற்துறை முன்னோடிகளுடனான தொடர்பை ஏற்படுத்துதல் போன்றன மாணவர்களின் யோசனைகளை சமூகத்திற்கு தேவையான தாக்கமிக்க தீர்வுகளாக மாற்ற அவர்களை மேலும் ஊக்குவிக்கின்றன.
5. EngEx 2025 இல் பங்கேற்பது அல்லது இணைவதில் காணப்படும் பிரத்தியேகமான பெறுமதிகள் தொடர்பில் மாணவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு எந்த தகவலை வழங்க விரும்புகிறீர்கள்?
"வாழ்விற்கான பொறியியல்" (“Engineering for Life”) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் EngEx 2025 கண்காட்சியானது, இலங்கையில் இதுவரை நடைபெற்ற கண்காட்சிகளில் மிகப்பெரிய பொறியியல் கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. EngEx 2025 ஒரு கண்காட்சி மட்டுமல்ல, அது தசாப்தத்திற்கு ஒருமுறை கிடைக்கும் அனுபவம். கண்காட்சிக்கு தொழிற்றுறையினர், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50,000க்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. AI and Machine Learning மற்றும் Robotics முதல் Modern Construction Technologies மற்றும் Sustainable Construction மற்றும் Healthcare Technology வரை நவீன வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பொறியியல் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை பார்வையாளர்கள் நேரில் காணலாம். பொறியியற் கல்வியில் சிறந்து விளங்குதல், புதுமையான ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான எமது பீடத்தின் 75 ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பைக் கொண்டாடும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த EngEx 2025 கண்காட்சி அமைகிறது.
விசேட குறிப்பு
இந்த EngEx 2025 கண்காட்சி செப்டெம்பர் 23 ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப நாளில் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும். 27 ஆம் திகதி வரை மு.ப. 10 மணி முதல் பி.ப. 7 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகளை OneTicket இணையத்தளத்தினூடாக கொள்வனவு செய்யலாம். நுழைவாயிலில் மட்டுப்படுத்தப்பட்டளவு பிரவேசச் சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்படும். அநாவசியமான கால தாமதங்களை தவிர்த்துக் கொள்ள, முன்கூட்டியே இணையத் தளத்தினூடாக தமக்கான பிரவேசச் சீட்டுகளை பார்வையாளர்கள் கொள்வனவு செய்யுமாறும், பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்போர், அந்தப் பிரதேசத்தின் இரம்மியமான சூழலை களங்கமின்றி பேண உதவுமாறும், குப்பைகளை, அவற்றுக்குரிய பகுதிகளில் மாத்திரம் இட்டு ஆதரவை வழங்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பொறியியலாளர். செல்வேந்திரன் வித்யாபன், பொது முகாமையாளர் -– Enterprise & SME தயாரிப்புகள் - SLT-MOBITEL
கலாநிதி. எஸ்.கே. நவரட்ணராஜா – பன்மொழித்திறன் பேச்சாளர் - EngEX 2025, பேராதனைப் பல்கலைக்கழகம்
நன்றி virakesari