உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்; மருந்து பொருட்களுக்கு அமெரிக்கா வரி குறித்து இந்தியா பதில்

27 புரட்டாசி 2025 சனி 05:35 | பார்வைகள் : 101
மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100% வரை வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பின் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து, வாராந்திர விளக்கக் கூட்டத்தில், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
நேற்று சமூக ஊடகங்களில் மருந்து மற்றும் பிற தயாரிப்புகளுக்கு புதிய வரிகள் குறித்து அதிபர் டிரம்ப் பேசிய ஒரு அறிவிப்பைப் பார்த்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சகமும், துறையும் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் தாக்கத்தை ஆய்வு செய்து வருகின்றன.
இந்த புதிய வரி விதிப்பு, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்து பொருட்கள் தயாரிப்புகளுக்கு பொருந்தும். இது ஜெனரிக்களுக்கு பொருந்தாது, ஏனெனில் இந்தியா பெரும்பாலும் ஜெனரிக் தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்தியா அமெரிக்காவிற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்தை ஏற்றுமதி செய்கிறது. எனவே இந்த புதிய உத்தரவால் இந்தியா பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஜனவரி முதல் இதுவரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாத ஒருவர் இருந்தால், எங்களிடம் பரிந்துரைக்கப்படும் போதெல்லாம், ஒரு இந்திய குடிமகன் என்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இது தான் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் விஷயத்திலும் நடந்து வருகிறது.
இந்தியாவில் இருந்து சட்டப்பூர்வ இடம்பெயர்வை ஆதரிக்கிறோம். விசா வழங்குவது ஒரு இறையாண்மை செயல்பாடு என்பதை நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வித் திட்டங்களில் சேர முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.