Paristamil Navigation Paristamil advert login

விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி 33 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்: நாளை கரூர் விரைகிறார் முதல்வர்

விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி 33 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்: நாளை கரூர் விரைகிறார் முதல்வர்

27 புரட்டாசி 2025 சனி 18:23 | பார்வைகள் : 178


கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்ல இருக்கிறார்.

இன்று நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். இதனைப் பார்த்த விஜய் உடனே தண்ணீர் பாட்டில் கொடுத்து உதவினார். அதன்பிறகு, விஜய் தனது உரையை நிகழ்த்தினார்.

விஜய் உரையை முடித்து கிளம்பும் போது, தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, முதல்வர் உத்தரவின் பேரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றுள்ளார். மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மகேஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேலும், கரூர் நிலவரம் குறித்து கலெக்டர் தங்கவேலுவிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்;கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்பிரமணியன், கலெக்டரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; கரூர் அரசு மருத்துவமனைக்கு பலரது உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம், இவ்வாறு கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்ல இருக்கிறார்.

பிரதமர் மோடி இரங்கல்

கரூர் துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயம் அடைந்தவர்கள் குணம் அடையவும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்