காங்கிரஸ் எம்.பி.,க்கள் சந்திப்பில் வருத்தத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்

28 புரட்டாசி 2025 ஞாயிறு 10:07 | பார்வைகள் : 133
முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் எம்.பி.,க்கள் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.
தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடந்த சந்திப்பில், காங்கிரஸ் எம்.பி.,க்களான கன்னியாகுமரி விஜய் வசந்த், கடலுார் விஷ்ணுபிரசாத், கரூர் ஜோதிமணி, மயிலாடுதுறை சுதா, கிருஷ்ணகிரி கோபிநாத், நெல்லை ராபர்ட் புரூஸ் ஆகியோர் பங்கேற்றனர். சந்திப்பின்போது, பார்லி மென்ட் தி.மு.க., குழுத் தலைவர் கனிமொழி, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடனிருந்தனர்.
மக்களிடம் விழிப்புணர்வு
காங்கிரஸ் எம்.பி.,க்களான, சிவகங்கை கார்த்தி, விருதுநகர் மாணிக்கம் தாகூர், திருவள்ளூர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் பங்கேற்கவில்லை. கடந்த 23ம் தேதி, தி.மு.க., - எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், 'வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு, எம்.பி.,க்கள் கடுமையாக உழைக்க வேண்டும். எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொகுதிகளில், வாரத்தில் நான்கு நாட்கள் தங்கி, மக்கள் பணியாற்ற வேண்டும்.
'இது தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை அளிக்க வேண்டும். மத்திய அரசின், மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, 'வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி தோற்றால், பா.ஜ., வலிமை பெற்றுவிடும்.
'இதை உணர்ந்து, வரும் சட்டசபை தேர்தலில் பணியாற்ற வேண்டும். உங்களின் வெற்றிக்காக, தி.மு.க., மாவட்ட, ஒன்றிய செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கடுமையாக உழைத்தனர்.
'அதுபோல், சட்டசபை தேர்தலில், அவர்களின் வெற்றிக்காக, காங்கிரஸ் எம்.பி.,க்களும் சேர்ந்து உழைக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய் பிரசார பயணம், அதற்கு வரும் மக்கள் கூட்டம், அ.தி.மு.க., உட்கட்சி குழப்பங்கள், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி, பா.ம.க.,வில் நடக்கும் மோதல் என, நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன், ஸ்டாலின் சகஜமாக பேசியுள்ளார்; அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்துள்ளார்.
'காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை கண்டுகொள்வது போல், எங்களை தி.மு.க., அரசும், அமைச்சர்களும் கண்டுகொள்வதில்லை' என்ற ஆதங்கத்தையும், ஸ்டாலினிடம் காங்கிரஸ் எம்.பி.,க்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
கரூர் மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்தார். இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என, கரூர் எம்.பி., ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து, ஜோதிமணி உள்ளிட்டோர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். 'இனி இதுபோல நடக்காது' என, முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார். சந்திப்பின்போது, காங்கிரஸ் எம்.பி.,க்கள் தங்கள் தொகுதி கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், ஸ்டாலினிடம் அளித்தனர். அவை அனைத்தையும் உடனடியாக பரிசீலிப்பதாக ஒவ்வொரு எம்.பி.,யிடமும் தனித்தனியாக சொல்லி அனுப்பிஉள்ளார் முதல்வர்.
முதல்வரிடம் உறுதி
முதல்வரை சந்தித்த காங்., - எம்.பி., ஒருவர் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., விலகி, த.வெ.க., பக்கம் செல்லப் போவதாக, காங்கிரஸ் தரப்பில் இருந்தே செய்தி பரப்புகின்றனர். 'அதேபோல, காங்கிரசுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, ஆளாளுக்கு ஒன்று பேசுகின்றனர். அப்படியொரு தகவல் வேகமாக பரப்பப்படுவது, கூட்டணிக்கு நல்லதல்ல.
'இரு கட்சி தொண்டர்களும் சட்டசபை தேர்தலில் ஒருமித்து செயல்பட முடியாத சூழல் ஏற்படும் என முதல்வர் தெரிவித்தார். அப்படியொரு சூழல் இனி இருக்காது என, காங்கிரஸ் தரப்பில்முதல்வரிடம் உறுதியளிக்கப்பட்டது' என்றார்.
திடீர் சந்திப்பு ஏன்?
கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது. அதில், 18ல் வென்றது. கடந்த 8ம் தேதி, நெல்லையில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'வரும் தேர்தலில், 125 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில், காங்கிரஸ் உறுதியாக உள்ளது' என்றார். அதுபோல், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், 'அதிக தொகுதிகள் வேண்டும்; ஆட்சியிலும் பங்கு வேண்டும்' என பேசி வருகிறார். இதையடுத்தே, காங் கிரஸ் எம்.பி.,க்களுடன் முதல்கட்டமாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1