Paristamil Navigation Paristamil advert login

இதய பாதிப்பினால் உயிரிழப்பை தடுப்பது எப்படி?

இதய பாதிப்பினால் உயிரிழப்பை தடுப்பது எப்படி?

30 கார்த்திகை 2020 திங்கள் 10:26 | பார்வைகள் : 9597


 உலகெங்கிலும் ஏற்படும் இருதய நோய்கள் தான் பெரும்பாலான உயிரிழப்பிற்கு காரணமாக விளங்குகிறது, அதிலும் திடீர் இருதய உயிரிழப்பு என சொல்லப்படும் இருதய பாதிப்பினால் ஏற்படும் திடீர் உயிரிழப்பு மிகவும் தீவிரமானது.


இதுகுறித்து சேலம் காவேரி மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கபிலன் கூறியதாவது:-

 
இருதயத்தின் செயல்பாட்டில் திடீரென்று ஏற்படும் பாதிப்பினால், அறிகுறிகள் தென்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் ஏற்படும் உயிரிழப்பினை திடீர் இருதய உயிரிழப்பு என்கிறோம். சராசரியாக 1000 நபர்களில் ஒருவருக்கு, திடீர் இருதய உயிழப்பு ஏற்படுகின்றது. இருதய பிரச்சினைகளால் ஏற்படும் 50 சதவீத மரணங்கள் திடீரென்று நிகழ்வதாகும். இவ்வாறான உயிரிழப்புகளுக்கு 80 சதவீதம் காரணமாக இருப்பது இருதய ரத்தக்குழாய்கள் அடைபடுவதினால் ஏற்படும் மாரடைப்பே ஆகும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகமாக உள்ள கொழுப்பு சத்து, புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. சில அரிதான காரணங்களினாலும் இந்த திடீர் இருதய உயிரிழப்பு ஏற்படலாம். இருதயத்தின் மின்னாற்றலை கடத்தக் கூடிய தசைகளில் ஏற்படும் பாதிப்புகளால், மிகவும் அதிகமான மற்றும் சீரற்ற இருதய துடிப்பினால் இம்மாதிரியான உயிரிழப்புகள் ஏற்படலாம். இருதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் தசையின் அபரிமித வளர்ச்சி காரணமாக அமையலாம்.

மாரடைப்பு வந்தவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சைகள் மேற்கொண்டு ரத்தக் குழாய்களிலுள்ள அடைப்புகள் நீக்கப்படவில்லையென்றால், இருதய தசைகளில் தழும்புகள் ஏற்படலாம். இதுபோன்ற தழும்புகளினாலும் சீரற்ற இருதய துடிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக அமையலாம். இருதயத்தின் செயல்பாடு மாரடைப்பினாலோ, தசை வலுவிழப்பினாலோ குறைவாக இருக்கலாம். அவ்வாறு இருக்கும் நிலையில் திடீர் இருதய உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இன்றைய நவீன மருத்துவத்தில் இவற்றை தடுக்கக்கூடிய நவீன சிகிச்சைகள் மற்றும் கருவிகள் உள்ளன. நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், படபடப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும் பொழுதே கால நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பான முறையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் இம்மாதிரியான உயிரிழப்புகளை கணிசமாக குறைக்க முடியும். இருதய நோய் உள்ளவர்கள் புகைப்பழக்கத்தை தவிர்த்து, ஆரோக்கியமான உணவு, வாழ்வியல் முறைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட்டால் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க இயலும்.

பொதுமக்கள், இதுபோல் நெஞ்சுவலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்போது, உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். அறிகுறிகள் தென்பட்டத்திலிருந்தே வீணாக்கப்படும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்பை நோக்கி ஒவ்வொரு படிக்கல்லாக கருதப்படுகிறது. இந்த பொன்னான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை, முழுமையான குணமடையும் சதவீதத்தை அதிகப்படுத்துகிறது. இருதய பாதிப்பினால் திடீர் உயிரிழப்பை தவிர்ப்பதற்கு விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்படுவதே சாலச்சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்