காலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்கள்
28 கார்த்திகை 2020 சனி 08:04 | பார்வைகள் : 9794
இரவில் நன்றாக தூங்கி காலையில் எழுந்ததும் தவிர்க்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நலம் சேர்ப்பதோடு அன்றைய தினத்தில் தேவையற்ற அசவுகரியங்களை தவிர்க்கவும் வழிவகை செய்யும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
1. காலையில் எழுந்ததும் சோம்பலை போக்குவதற்கு நிறைய பேர் கைகளை மேலே தூக்கி உடலையும், கைகளையும் வளைப்பார்கள். அப்படி நீட்டி முறிப்பது தவறில்லை. அதே வேளையில் வலது பக்கமாக உடலை சாய்த்து நீட்டி முறிப்பது நல்லது. அது தசைகளை வளைந்து கொடுக்க செய்து உடலை இலகுவாக்க உதவும்.
2. காலையில் எழுந்த உடனேயே உடற்பயிற்சி செய்வது நல்ல பழக்கம் அல்ல. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்திருப்பதால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சியை தொடங்கக்கூடாது. திரவ உணவுகளையோ அல்லது நீரோ பருகிவிட்டு உடற் பயிற்சி செய்வது நல்லது.
3. காலை வேளையில் உடற்பயிற்சியை அறவே தவிர்ப்பது நல்ல பழக்கம் அல்ல. தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு காலை வேளை உடற்பயிற்சி பலன் கொடுக்கும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சோர்வை போக்கி உடல் ஆற்றலை அதிகப்படுத்தவும் உதவும். நாள்பட்ட சோர்வுடன் இருப்பவர்கள் காலை வேளையில் தவறாமல் உடற்பயிற்சி செய்துவருவது நல்லது.
4. சூரிய வெளிச்சம் நன்றாக பிரகாசிக்க தொடங்கிய பிறகும் தூங்கிக்கொண்டிருப்பது தவறான பழக்கம். காலையில் எழுந்ததும் கண்கள் கூசாத அளவில் சூரிய கதிர்களை பார்ப்பது நாள் முழுவதும் மனநிலையையும், உடல் ஆற்றல் மட்டத்தையும் அதிகரிக்க உதவும். மழைக்காலங் களில் சூரிய கதிர்களை பார்க்க முடியாத பட்சத்தில் விளக்கு வெளிச்சத்தை சில விநாடிகள் பார்க்கலாம்.
5. நிறைய பேர் அலாரம் வைத்து எழும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். காலையில் அலாரம் அடித்தவுடன் எழுந்தால் பரவாயில்லை. அதனை அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்குவதற்கு முயற்சிப்பார்கள். அப்படி தூங்க முயற்சிப்பது பகல் நேர தூக்கத்திற்கும், உடல் செயல்திறனை குறைப்பதற்கும் வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
6. காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். மன அழுத்தத்தை உருவாக்கும் கார்டிசோல் ஹார்மோன் காலை வேளையில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி பருகியதும் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உணரலாம். என்றாலும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகும்போது மன அழுத்தத்தில் தள்ளிவிடும். இரவில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் உடலில் தேங்கி இருந்த நச்சுகளை வெளியேற்றவும், கல்லீரலை தூய்மையாக்கவும் தண்ணீர் பருகுவது நல்லது.
7. காலை உணவை தவிர்ப்பதும் நல்லதல்ல. இரவு முழுவதும் ஓய்வெடுக்கும் உடலுக்கு காலையில் தேவையான ஆற்றலை வழங்கும் சக்தி உணவுக்குத்தான் இருக்கிறது. காலை உணவை தவிர்ப்பது உடல்நலம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு வித்திடும்.