Paristamil Navigation Paristamil advert login

“ஜென் Z” போராட்டங்கள் ; அரசாங்கத்தை கலைத்த மடகஸ்கார் ஜனாதிபதி

“ஜென் Z” போராட்டங்கள் ; அரசாங்கத்தை கலைத்த மடகஸ்கார் ஜனாதிபதி

1 ஐப்பசி 2025 புதன் 06:29 | பார்வைகள் : 101


நீண்டகாலமாக நிலவும் தண்ணீர் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் பல நாட்களாகத் தொடர்வதால், மடகஸ்கார்  ஜனாதிபதி தனது அரசாங்கத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார்.

"அரசாங்க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யவில்லை என்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என திங்களன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேசிய உரையில் மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாதெரிவித்துள்ளார்.

"நாங்கள் வாழ விரும்புகிறோம், உயிரிழக்க விரும்பவில்லை" என கோசமிட்டு “ஜென் Z” போராட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், வியாழக்கிழமை முதல் மடகஸ்கார் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.


அமைதியின்மையை அடக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தியமையினால் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு,100 பேர் காயமடைந்துள்ளனர்.  இது  தேவை அற்ற செயல் என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டித்துள்ளார்.

மடகஸ்காரின் வெளிவிவகார அமைச்சு ஐ.நா.வின் புள்ளிவிவரங்களை நிராகரித்துள்ளதோடு, "வதந்திகள் அல்லது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது" என குற்றம் சாட்டியுள்ளது.

முதலில் தலைநகர் அன்டனனரிவோவில் போராட்டங்கள் ஆரம்பமாகின. ஆனால் பின்னர் மடகஸ்கார் நாடு முழுவதும் எட்டு நகரங்களுக்கு பரவியுள்ளன.


வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அன்டனனரிவோவில் மாலை முதல் விடியற்காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,

கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பாதுகாப்புப் படையினரின் வன்முறை அடக்குமுறையால் தான் "அதிர்ச்சியடைந்ததாக" ஐ.நா ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

கைதுகள், தடியடிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற மற்றும் விகிதாசாரமற்ற சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு பாதுகாப்புப் படையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று டர்க் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.வின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் "பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள், ஆனால் போராட்டக்காரர்களுடன் தொடர்பில்லாத தனிநபர்கள் மற்றும் கும்பல்களால் அடுத்தடுத்த பரவலான வன்முறை மற்றும் கொள்ளையில் கொல்லப்பட்ட மற்றவர்களும் அடங்குவர்".


கடந்த வாரம், மடகஸ்கார் ஜனாதிபதி வேலையைச் சரியாகச் செய்யத் தவறியதற்காக மின்சக்தி அமைச்சரை பதவி நீக்கம் செய்ததாக அறிவித்தார், ஆனால் ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தின் ஏனையவர்களும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர்.

"மின்வெட்டு மற்றும் குடிநீர் வழங்கல் பிரச்சனைகளால் ஏற்பட்ட கோபம், கவலை மற்றும் சிரமங்களை நான் புரிந்து கொள்கிறேன்," என ரஜோலினா,  தேசிய ஊடகமான டெலெவிசியோனா மலாகாசி வாயிலாக தனது உரையில் தெரிவித்தார்.

அண்ட்ரி ராஜோலினா, "பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புகளை நிறுத்திவிட்டேன்" எனவும், அடுத்த மூன்று நாட்களில் புதிய பிரதமருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சர்கள் இடைக்கால அமைச்சர்களாகச் செயல்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இளைஞர்களுடன் கலந்துரையாட விருப்பம் இருப்பதாகவும் ரஜோலினா தெரிவித்துள்ளார்.


1960ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, மடகஸ்கார் பல எழுச்சிகளால் அதிர்ச்சி அடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் நடந்த பெரும் போராட்டங்கள், முன்னாள் ஜனாதிபதி மார்க் ரவலோமானனாவை பதவி விலகச் செய்தன. அப்பொழுது ரஜோலினா அதிகாரத்தில் வந்தார்.

2023இல் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தப் போராட்டங்களே ஜனாதிபதி எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்